வியாழன், 7 ஜனவரி, 2021

தம்ரூட் அல்வா


மஸ்கோத் அல்வா




மஸ்கோத் அல்வா
+++++++++++++++++

தேவை :
----------

சம்பா கோதுமை - 1 கப் ( 200 கிராம்) ,
முற்றிய தேங்காய்  --- 3,
நாட்டுச் சர்க்கரை   --- 400 கிராம்,
ஏலக்காய் ---- 6, முந்திரிப்பருப்பு -- 25 கிராம், 
சுத்தமான தேங்காயெண்ணெய் ( விரும்பினால்)  --- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
-----------------
 சம்பா கோதுமையை  நீரில் போட்டு  இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள்  காலையில் ,நீர் வடித்துவிட்டு, புதிதாக நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்தபின் சக்கையை எறிந்து விடவும் .. 
அடுப்பில் வைத்து கிளறவும். நாட்டுச்சர்க்கரையை வெந்நீரில் கரையவிடவும்.

தேங்காய்களை அரைத்து திக்கான பால் எடுத்து கோதுமைக்கலவையில் சேர்த்துக் கிளறவும்.  சர்க்கரைக் கரைசலை சேர்த்துக் கிளறியபடி இருக்கவும்.  விரும்பினால் தேங்காயெண்ணெய் சேர்க்கவும். . நீண்ட நேரத்துக்குப் பின் எண்ணெய் கசிந்து  பிரிய ஆரம்பிக்கும் போது சேர்த்துக் கிளறி, முந்திரித் துண்டுகள் தேங்காய் எண்ணெயில் வறுத்துப் போட்டு இறக்கி, வேறு  எண்ணெய் தடவிய டிரேயில் பரப்பி  ஆறியதும் துண்டு போடவும்.

தேங்காய்ப்பால் எண்ணெயாக பிரியும் வரை கிளற வேண்டும் என்பதால் இந்த அளவு கிளற குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். 






செவ்வாய், 6 அக்டோபர், 2020

தால் கிரேவி

                 தால் கிரேவி
            ********************
தேவையானவை :
-------------------------------
துவரம்பருப்பு -- 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு --- 2 டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு ----      2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் -- 1,
தக்காளி --- 2 ,
புதினா இலைகள் --- 1கைப்பிடி,
பூண்டு பற்கள் -        6,
பச்சை மிளகாய் --- 2,
சாம்பார் பொடி ---- 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி ----      1/4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு-----   6
சோம்பு ---- 1 டீஸ்பூன் ,
உப்பு, எண்ணெய் -- தேவைக்கு.

செய்முறை :
-----------------------
மூன்றுவகை பருப்புகளோடு, மஞ்சள்பொடி சேர்த்து வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். முந்திரிப்பருப்பை சிறிது காய்ச்சிய பால், அல்லது வெந்நீரில் ஊறப்போடவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,புதினா, பூண்டு பற்கள்,பச்சை மிளகாய்  சேர்த்து நன்கு வதங்கியதும் குக்கரில் போட்டு, ஊறிய பருப்புகள் உப்பு,சாம்பார்பொடி  சேர்த்து, விரும்பினால் ஏதாகிலும் காய்த்துண்டுகள் சேர்த்து போதுமான தண்ணீர் விட்டு பிரஷரில், ஒரு பிரஷர் வந்ததும் அடுப்பைக் குறைத்து வைத்து ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.

பிரஷர் தணிந்ததும்,குக்கரைத்  திறந்து, கலவையை நன்கு மசித்து விட்டு தேவைப்பட்டால் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, முந்திரிப்பருப்பை நைசாக அரைத்து சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
இந்த கிரேவி இட்லி, தோசை, பொங்கலோடு சாப்பிட சூப்பர் டேஸ்ட்! 

திங்கள், 5 அக்டோபர், 2020

பாதாம் அல்வா

                பாதாம் அல்வா
              --------------------------------
செய்முறை :
---------------------
200 கிராம் பாதாம் பருப்பை வெந்நீரில் பத்து நிமிடங்கள் போட்டு வைத்து கைகளில் அழுத்திப் பிசைந்தால் தோல் பிரிந்து விடும். நன்கு புதிய நீரில் அலசி நீர் வடித்து மீண்டும் நீரில் போட்டு நான்கு மணி நேரம் ஊறியதும், நீர் வடித்து விழுதாக அரைக்கவும். 

விழுதை ஒரு கிண்ணத்தில் நிரப்பினால் இருக்கும் அதே அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.150 கிராம் நெய் எடுத்துக் கொள்ளவும். 
அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியில் 50 கிராம் நெய் விட்டு பாதாம் விழுதை வதக்கவும். இரண்டு நிமிடம் கிண்டியபின் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை தளர்ச்சியாகும்.  சிறிது குங்குமப்பூவை சூடான அரை கப் பாலில் கலந்து இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து கலவையில் சேர்க்கவும். ஏலப்பொடி போடவும். சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி அல்வா சுருண்டு வரும்வரை கிளறி இறக்கவும்.  
குங்குமப் பூ சேர்ப்பதால் மஞ்சள் நிறம் வரும். இல்லையென்றாலும் இயல்பான பட்டர் நிறத்தில் இருக்கும் இந்த அல்வாவை கிளாஸ் பேப்பரில் சுற்றியும் வைக்கலாம். 

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

பருப்புருண்டை தயிர்க் குழம்பு


பருப்புருண்டை தயிர்க்குழம்பு

      **************************************

தேவை :
----------------
            துவரம் பருப்பு, கடலைப் பருப்பு-- தலா 1/2 கப்,
            புளி ----     சின்ன எலுமிச்சை அளவு,
             பச்சை மிளகாய் ----   4,
               சீரகம்  ---  1 டீஸ்பூன்,
                இஞ்சி ----   சின்ன துண்டு,
                 மிளகாய்த் தூள் ----   1/2 டீஸ்பூன்,
                 மல்லித்தூள் ----            1 டீஸ்பூன்,
                    மஞ்சள் தூள் --------      1/2 டீஸ்பூன்,
                   சின்ன வெங்காயம் ----   1கைப்பிடி,
                   பூண்டு பற்கள் ----            4,
                     தயிர் -------                         2 டேபிள்ஸ்பூன், 
                   உப்பு, எண்ணெய் ----      தேவைக்கு,
                   தாளிக்க :   கடுகு, உளுந்தம்பருப்பு,
                                           கறிவேப்பிலை.

  செய்முறை :
---------------------
                 துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஒன்றாக நீரில் போட்டு,  குறைந்தது ஒரு மணிநேரம் ஊறியபின், முற்றுமாக நீர் வடித்து, பச்சைமிளகாய் ,சீரகம், இஞ்சி, உப்பு ( விரும்பினால் சிறிது பெருங்காயமும்)  சேர்த்து நீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்து, மிகமெல்லியதாக நறுக்கிய பூண்டு பற்கள், சிறிது மல்லித்தழை ( விரும்பினால் இரண்டு சின்ன வெங்காயம் மெலிதாக நறுக்கிப்போட்டு )சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி  வைத்துக் கொள்ளவும்.

          வாணலியில் எண்ணெய் காயவைத்து, தாளிக்கும் பொருட்கள் தாளித்து,வெங்காயம், தக்காளித் துண்டுகள், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியபின் புளி கரைத்த நீர் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து போதுமான நீர் விட்டு குழம்பைச் சற்று நீர்க்கக் கொதிக்க விடவும். குழம்பு நல்ல மணமாக ,நல்ல நிறத்துடன் வரும்போது, பருப்புருண்டைகளை நான்கு நான்காகப் போட்டு, கரண்டியால் கிண்டாமல்,உருண்டைகள் உடைந்து விடாதபடி,  இரு பிடிகளையும் துணியால் பிடித்து ஆட்டி விட்டு, உருண்டைகள் நன்கு வெந்ததும், தயிர் சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும்.

மிகுந்த சுவையும், சத்துக்களும் நிறைந்த இந்தக் குழம்பை சூடான சாதத்தோடு பிசைந்து ருசிக்கலாம்.






 

சனி, 3 அக்டோபர், 2020

கொண்டைக் கடலை காரக்குழம்பு

                    கொண்டைக்கடலை காரக்குழம்பு

           **********************************

தேவை :
-------------
              பெரிய வெள்ளை கொண்டைக்கடலை ----     1கப்,
               சின்ன வெங்காயம் ------       1 கைப்பிடி,
                பூண்டு  பற்கள் -------                 10,
                  தக்காளி ------                                 2,
                புளி    -----------                                    சின்ன எலுமிச்சை அளவு,
                 மிளகாய்த்தூள் --------                 1/2 டீஸ்பூன்,
                 மல்லித்தூள் ---------                         1 டீஸ்பூன்,
                   சீரகத்தூள் --------                              1/2 டீஸ்பூன்,
                    மஞ்சள் தூள் --------                           1/2 டீஸ்பூன்,
                     வெல்லத்தூள் ------                          2 டீஸ்பூன்,
                     உப்பு, எண்ணெய் --------                 தேவைக்கு.
 
செய்முறை :
-------------------
      கொண்டைக்கடலை  நீரில் மூழ்கும் வரை ஊறப்போட்டு, குறைந்தது ஐந்து மணி நேரம் ஊறியதும், நீரை வடித்து, புதிய நீரில் உப்பு  சேர்த்து மலர வெந்தபின்  இறக்கவும்.
  வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம் பருப்பு,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, உரித்த வெங்காயம், பூண்டு பற்கள், தக்காளித் துண்டுகள் , இரண்டு பச்சை மிளகாய்சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், புளி கரைத்த நீர் விட்டு  ,மஞ்சள்தூள் ,மிளகாய் த்தூள்,மல்லித்தூள், சீரகத்தூள் ,உப்பு சேர்த்து போதுமான நீர் விட்டு பச்சை வாசனை போகும் வரை கொதித்ததும், வெந்த கொண்டைகடலை சேர்த்து சிறிதுநேரம் கொதித்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, வெல்லத்தூள் போட்டு, விரும்பினால் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் அல்லது 2 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து  கொதித்ததும் இறக்கவும்.
 
சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.  புட்டோடு சேர்த்துச் சாப்பிடலாம்.  மிகவும் சத்தும், சுவையும் நிரம்பிய குழம்பு. 

திங்கள், 21 செப்டம்பர், 2020

கத்தரிக்காய் தயிர்க் குழம்பு



               கத்தரிக்காய் தயிர்க் குழம்பு

                     ***************************

தேவை :

-----------------
                   பிஞ்சு கத்தரிக்காய்  ----- 4 ,      சின்ன வெங்காயம் ---- ஒரு கைப்பிடி,
                     பூண்டு பற்கள் -----     10,  தக்காளி ---- 2,     புளி --- சின்ன எலுமிச்சையளவு
                     தயிர் -----  2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் --- 2 டீஸ்பூன்,
                      கறி வடகம் ---- சின்ன சைஸ் 2,  கறிவேப்பிலை  ,மல்லித்தழை, புதினா ---
                                                                                                                                              தலா ---சிறிது 
                        மிளகாய்த்தூள் ---- 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன்,
                        மஞ்சள் தூள் ------  1/2. டீஸ்பூன்,
                       உப்பு, எண்ணெய் ------ தேவைக்கு ..

செய்முறை :

------------------------

                                     வாணலியில் எண்ணெய் காயவைத்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும், உரித்த சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், இரண்டு பச்சை மிளகாய்கள் ,தக்காளித் துண்டுகள் சேர்த்து நன்கு வதங்கும் போது, கத்தரிக்காய்களை நான்காக வகுந்து போட்டு, மஞ்சள் தூள், புதினா, மல்லித்தழை
 சேர்த்து காய்கள் சுருங்கும் வரை வதங்கியபின், புளித்தண்ணீர்  விட்டு மிளகாய்த் தூள், மல்லித்தூள்,  1/2 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்துப் போதுமான நீர் விட்டு காய்கள் குழைந்து, குழம்பு பச்சை  வாசனை போய்  திக்காகி எண்ணெய்  மிதக்கும் நிலையில், வெல்லம் போட்டு, தயிரைக் கலக்கி ஊற்றிக் கொதித்ததும், இன்னொரு பர்னரில், நல்லெண்ணெய் காயவைத்து  கறி வடாம் பொரித்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டிக் கிளறிவிட்டு இறக்கவும்..
  
                          சூடான சாதத்தோடு  பிசைந்து  சாப்பிட சூப்பர் குழம்பு . சுட்ட. அப்பளமும், பருப்புத் துணையானால் தேவாமிர்தம்  .