சனி, 27 ஜூன், 2020

ஜிஞ்சர் பால்ஸ்



ஜிஞ்சர் பால்ஸ்
------------------------------
தேவை
------------
இஞ்சி  ---- 100 கிராம்,
வெல்லம் ------ 250 கிராம்,
நெய் ----- 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் ---- 5

செய்முறை
--------------------
இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.வெல்லத்தை கொதிக்கும் நீரில் கரைத்து வடிகட்டி பாகு உருட்டுப் பதம் வரும் போது இஞ்சி விழுது, நெய் சேர்த்துக்  கிளறி ஏலப்பொடி சேர்த்து சுருண்டு வரும்போது இறக்கி வேறு டிரேயில் மாற்றி, பொறுக்கும் சிறு உருண்டைகளாக உருட்டவும்..
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்தப் பதார்த்தம் சுவையானது, ஜீரணசக்தியைத் தூண்டுவது.

சனி, 20 ஜூன், 2020

எள்ளுப்பணியாரம்


எள்ளுப்பணியாரம்
----------------------------------
தேவை:
--------------

பச்சரிசி, புழுங்கலரிசி --- தலா 1/2 கப்,
ஜவ்வரிசி  ---- 1/4 கப்,
வெள்ளை எள்ளு ---- 50 கிராம், பொடித்த வெல்லம் --- 1கப்,
தேங்காய்ப்பூ --- 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் --- 5,
உப்பு, எண்ணெய் ---- தேவைக்கு.

செய்முறை :
----------------------

பச்சரிசி புழுங்கலரியை ஒன்றாகவும் ,ஜவ்வரிசியைத் தனியாகவும் ஊறப்போடவும். ஊறிய அரிசிகளைச் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.இட்லிமாவு பதத்திற்கு எடுக்கும் முன்பு ஜவ்வரிசியும் சேர்த்து அரைத்து எடுக்கவும். 

எள்ளை வறுத்துப் பொடிக்கவும். வெல்லத்தை கொதிக்கும் கரைத்து வடிகட்டி தேங்காய்ப்பூ சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி  பாகாக முதிரும் போது இறக்கி எள்ளுப்பொடி சேர்த்துக் கிளறியபின்,  காய்ந்த பணியாரக் கல்லின் குழிகளில் எண்ணெய் விட்டு, தோசைமாவு பதத்துக்குக் கரைத்த மாவு சிறிது ஊற்றி நடுவில் எள்ளுப் பூர்ணம் வைத்து, மறுபடி மேலே மாவு ஊற்றி  வெந்ததும் திருப்பி விட்டு சிவக்க வெந்து எடுக்கவும்.

மிகுந்த சுவையான இந்த பணியாரம் சத்து நிறைந்தது. அனைவரும் விரும்புவர்.



வியாழன், 18 ஜூன், 2020

திருநெல்வேலி அல்வா



திருநெல்வேலி அல்வா 
---------------------------------------

தேவை
--------------

சம்பா கோதுமை ----  1 கப் ( 200 கிராம்) 
சர்க்கரை ------ 3 கப் ( 600 கிராம்) 
நெய் --- ( 600 கிராம்)
ஏலக்காய் -- 6
முந்திரிபருப்பு ---- 20 கிராம்.

செய்முறை
---------------------
கோதுமையை எட்டு மணி நேரம் நீரில் ஊறவிட்டு, நீர் விட்டு அரைத்து வடிகட்டி,  பாலெடுத்து , 5 மணி நேரம் தெளியவிட்டு, தெளிந்த நீரை இறுத்து விட்டு, அடியில் கெட்டித்திருக்கும் பாலுடன் 4 கப் நீர் சேர்த்து கலக்கவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்தெடுத்த பின் அந்த வாணலியிலேயே மாவை ஊற்றி கிண்டவும் . மாவு ஜெல் போல திரளும் போது 2 1/2 கப் சர்க்கரை போடவும்.  1/2 கப் சர்க்கரையை ஒரு சிறிய பேனில் போட்டு சிறிது நெய் ஊற்றி கிண்டி கலர் திரவமாக வந்ததும் மாவு கலவையில் ஊற்றவும். இன்னொரு அடுப்பில் தண்ணீர் கொதித்தபடி இருக்கட்டும்.
மாவு வேக வேக இடையிடையே கொதிக்கும் சிறிது சிறிதாகச் சேர்க்கவும்.  நெய் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். எல்லா நெய்யையும் ஊற்றி விடவும். நாலு கப் அளவு தண்ணீர் ஊற்றியதும் நிறுத்தி விடவும். ஏலப்பொடி சேர்த்து கை விடாமல் பாத்திரத்தில் ஒட்டாமல் சுருளும் போதும் கிளறுவதை நிறுத்தாமல் நெய் பிரிந்தபின் முந்திரி தூவி இறக்கவும்.

புதன், 17 ஜூன், 2020

மாம்பழக் குழம்பு




மாம்பழக் குழம்பு
------------------------

தேவை
-------------
சின்ன சைஸ் மாம்பழம் - 4 ,
துவரம் பருப்பு - 1/4 கப்,
புளி  --- சின்ன எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், 
சின்ன வெங்காயம்  - 1 கைப்பிடி,
தக்காளி -- 2, பச்சை மிளகாய் - 4,
கறிவடகம் --- பெரிய சைஸ் 2
உப்பு, எண்ணெய் --தேவைக்கு 

செய்முறை
---------------------
துவரம்பருப்பை மஞ்சள் பொடி போட்டு கரைய வேகவிடவும்.
வாணலியில் நல்லெண்ணெய் காயவைத்து, கறி வடகம் உதிர்த்துப் போட்டு பொரிந்ததும் எடுத்து வைக்கவும். அதே வாணலியில் நாலு கறிவேப்பிலை எண்ணெயில் தாளித்து  தக்காளித் துண்டுகள் உரித்த வெங்காயம் கீறிய பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதங்கியபின் புளி கரைத்த நீர் விட்டு சாம்பார்பொடி உப்பு சேர்க்கவும்.  1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொதித்ததும் கொத்துமல்லி  இலை துவரம்பருப்பு சேர்த்து கொதித்ததும் குழம்பு சற்று லூசாக இருக்கும் நிலையிலேயே மாம்பழங்களைப் போட்டு ஒரு நிமிடம் கொதித்ததும் பொரித்த கறிவடகம் தூவி இறக்கி, சூடான சாதத்தோடு பரிமாறவும்.
சுவையில் அசத்தும் இந்த வித்தியாசக் குழம்பு! 

மாம்பழ அல்வா



மாம்பழ அல்வா 
**********************

தேவை :
------------
கனிந்த புளிப்பில்லாத மாம்பழம் - 1,
பாதாம் பருப்பு -- 100 கிராம்,
ஆவின்பால் ---- 1/2 லிட்டர்,
சர்க்கரை --- 300 கிராம் ,
நெய் --- 100 கிராம்,
ஏலக்காய் ---- 5,
முந்திரி பருப்பு -  20 கிராம்

செய் முறை
--------------------
பாதாம்பருப்பை குறைந்தது 4 மணி நேரம் ஊறவைத்துத் தோல் நீக்கி நைசாக அரைக்கவும்.

மாம்பழத்தைத் தோல் , கொட்டை  நீக்கி மசிக்கவும்.  பாலைச் சுண்ட காய்ச்சவும்.
அத்துடன் மாம்பழக் கூழ் சேர்த்து வேகவிடவும்.

சர்க்கரை யை பாதாம் விழுதோடு சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். சர்க்கரை கரைந்து கலவை திரளும் போது நெய் சேர்த்து, பால், மாம்பழக் கலவை சேர்த்து ஏலப்பொடி போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பிரிந்தபின் இறக்கவும். 

திங்கள், 15 ஜூன், 2020

கொள்ளு கஞ்சி + தனியா துவையல்


கொள்ளு கஞ்சி + தனியா துவையல்

-------------------------------------------------------------------------------------------
கொள்ளு கஞ்சி 
-------------------------
செய்முறை :
-------------------
1/2 கப் கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி பிரஷரில் நன்கு வேகும்வரை, அதாவது ஒரு பிரஷர் வந்ததும் அடுப்பைக் குறைத்து பத்து நிமிடங்கள் பின்பு அணைக்கவும்.

பிரஷர் தணிந்ததும், 1 கப் புழுங்கலரிசியைக் களைந்து வெந்த கொள்ளுடன் சேர்க்கவும்.  மேலும் இரண்டு கப் நீர் சேர்த்து உப்பு போட்டு மீண்டும் பிரஷரில் 5 நிமிடங்கள் குழைய வேகவிட்டு இறக்கி, தேவைப்பட்டால் மேலும் வெந்நீர் விட்டு கிளறி பரிமாறவும் . தனியா துவையல் மிகப் பொருத்தம். 

இந்த கஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. சளிக்கு மருந்து. நல்ல சக்தி உடம்புக்கு.
----------------------

தனியா துவையல் 
---------------------------------
செய்முறை
--------------------
1/2 கப்  தனியாவோடு  நாலு மிளகாய்  சேர்த்து  வெறும் வாணலியில் வறுத்து உப்பு  சேர்த்து  நீர் விடாமல்  நைசாகப் பொடித்து  , நெல்லிக்காய் அளவு புளி கரைத்த நீர்  சேர்த்து, 1 ஆர்க்கு கறிவேப்பிலையை உருவி எண்ணெயில் பொரித்து 
சேர்த்து துவையலாக. அரைத்து  எடுக்கவும்.
 
------------------------------------------------------------------------

ஞாயிறு, 14 ஜூன், 2020

ரவா ஸ்வீட் பாத்



ரவா ஸ்வீட் பாத்
+++++++++++++++++

தேவை
-------------
பாம்பே ரவை ---1கப்,
ஆவின்பால் ----- 3 கப்,
சர்க்கரை --- 2 கப்,
நெய் ----100 கிராம்,
ஏலக்காய் ---- 6,
முந்திரி, திராட்சை ---- தலா 20 கிராம்.

செய்முறை :
-------------------

வெறும் வாணலியில் ரவையை வறுத்தெடுக்கவும்.3 கப் ஆவின் பாலோடு 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும், அடுப்பைக் குறைத்து வைத்து ரவையைக் கட்டிப்படாமல் தூவிக் கிளறவும். குழைய வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் நெய் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். ஏலப்பொடி போடவும்.சுருண்டு வரும் போது திராட்சை முந்திரி வறுத்துப் போட்டு இறக்கலாம்.

விரும்பினால் கலர்ப்பொடி போடலாம். பாலும் நெய்யும் சேர்ந்து அழகிய பட்டர் கலரில் காட்சி அளிக்கும் இந்த சுவை மிக்க தித்திப்பு அனைவருக்கும் பிடிக்கும். 

எலுமிச்சை சாதம்



எலுமிச்சை சாதம் 
*************************
தேவை : 
---------------
சாப்பாட்டு அரிசி ---- 1 கப் ( 200 கிராம்) ,
எலுமிச்சம் பழம் (மீடியம் சைஸ்)  -- 2

செய்முறை
---------------------------
அரிசியைக் களைந்து நீர் சேர்த்து குழையாமல் உதிரியான சாதம் ஆக்கவும்.
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து மஞ்சள் பொடி ,உப்பு கலக்கவும்.
வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா 1 டீஸ்பூன் போட்டு, கறிவேப்பிலை போட்டு மெலிதாக சிறிதாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் போட்டு எலுமிச்சை சாறு ஊற்றி பொங்கியதும் இறக்கி சாதத்தை உடைத்துக் கிளறியபின் ஊற்றி நன்கு கிளறினால் எலுமிச்சை சாதம் ரெடி. 

புளிப்பும் இனிப்புமாய் அசத்தல் சுவை கொண்ட இந்த சாதத்துக்கு பொரித்த வற்றல் வடகம், துவையல்கள், காரக்கறிகள், கூட்டு வகைகள், மாம்பழம், மாங்காய் அனைத்தும் சுவைக்கு சுவை கூட்டும். 

வெள்ளி, 12 ஜூன், 2020

கறி வடாம்




கறி வடாம்
------------------

தேவை 
-----------------
சின்ன வெங்காயம்  -----   1 கிலோ
பூண்டு ---- 100 கிராம் 
துவரம் பருப்பு  ---- 100 கிராம் 
கடுகு, வெள்ளை உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் ---- தலா 50 கிராம்
மஞ்சள் பொடி --- 2 டீஸ்பூன் 
விளக்கெண்ணெய் ---- 50 மில்லி
உப்பு  ---- 1 கைப்பிடி
கறிவேப்பிலை ---- 2 ஆர்க்கு

செய்முறை :
----------------------

சின்ன வெங்கயத்தை தோல் நீக்கி, கல்லுரலில் குத்தி ஒன்றிரண்டாக உடைக்கவும். அல்லது மிக்ஸியில் சுற்றவும் . பூண்டு பற்களை தோல் நீக்காமலே ஒன்றிரண்டாக நசுக்கி சேர்க்கவும். மஞ்சள் பொடி உப்பு போட்டு கலக்கவும். உப்பு கரிக்குமளவுக்கு  அதிகமாக இருக்க வேண்டும். 
விளக்கெண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து, நீர் வருமளவு அழுத்திப் பிசைந்து  மூடி வைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்தபின் 
மறுநாள் கையினால் தண்ணீரை இறுக்கிப் பிழிந்து முடிந்த அளவு உருட்டி தட்டில் வைத்து வெயிலில் வைத்து காய விடவும். தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். 

மாலை அனைத்தையும் தண்ணீரில் கலந்து எடுத்து மறுநாளும் முன்பு பண்ணிய மாதிரியே காயவைத்து எடுக்கவும் . தண்ணீர் வற்றி அனைத்தும் உலர்ந்த நிலைக்கு வந்த பின் மேலும் காயவிடாமல் விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாகப் பிடித்து வெயிலில் காயவிடவும். அடிக்கடி இறுக்கி பிடித்து வைக்கவும். நன்கு காய்ந்த பின் ஈரமில்லாத பாத்திரத்தில் சேகரித்து வைக்கவும்.

காரக்குழம்பு, மீன் குழம்பு கீரைக்கடையல் போன்றவற்றுக்கு சுவை கூட்டும் தாளிப்பு வடாம் இது! 

காசி அல்வா



காசி அல்வா
-----------------------

தேவை :
-------------
வெள்ளை பூசனிக்காய் --- 2 கிலோ,
சர்க்கரை ----- தேவைக்கு,
நெய் --- 100 கிராம், 
ஏலக்காய் - 6,
முந்திரிபருப்பு - 20 கிராம்

செய்முறை
-------------------
பூசனிக்காய் தோல், விதைகள் நீக்கி, துருவி பிழிந்து நீரை தனியே எடுத்தபின், துருவலை மிக்ஸியில் சுற்றி மசிக்கவும்.
மசியலை ஒரு கிண்ணத்தில் நிரப்பி, அதே கிண்ணத்தில் அரை கிண்ணம் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.
முந்திரித் துண்டுகளை வாணலியில் நெய் விட்டு வறுத்து எடுத்தபின் அந்த வாணலியிலேயே பூசனி மசியலை  வேகவைக்கவும். பூசனி நீரையும் சேர்த்து வாசம் வரும் வரை வெந்ததும் ,சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், விரும்பிய கலர் போட்டு நெய் சிறிது, சிறிதாக விட்டுக் கிளறி ஏலப்பொடி சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத நிலை வந்தபின்னும் நெய் பிரியும் வரை கிண்டி, வறுத்த முந்திரி சேர்த்து  இறக்கவும். 

புதன், 10 ஜூன், 2020

மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி
*********************

தேவை  :
---------------
கல்லாமணி மாங்காய் --- 1
மிளகாய் வற்றல் -- 4
புளி   - நெல்லிக்காய் அளவு 
வெல்லத்தூள் --- 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவைக்கு.

செய்முறை :
---------------------
மாங்காயை துண்டுகளாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு சிவந்ததும் மாங்காய்த் துண்டங்கள் போட்டு நீர் விட்டு உப்பு போட்டு புளித்தண்ணீர் விட்டு மாங்காய் வேகும்போது வெல்லத்தூள் போட்டு நீர் வற்றியதும் மாங்காய் குழையாமல் இறக்கவும் .

செவ்வாய், 9 ஜூன், 2020

தர்பூசணி அல்வா



தர்பூசணி அல்வா 
---------------------------

தேவை :
-------------

தர்பூசணி  ----- 2 கிலோ
பாதாம் பருப்பு ----- 100 கிராம் 
சர்க்கரை ----- 300 கிராம் 
நெய்.----- 100 கிராம் ,
முந்திரிப்பருப்பு - 20 கிராம்
ஏலக்காய் --- 6

செய்முறை :

பாதாம் பருப்பை நீரில் ஊறவிட்டு தோல் நீக்கி நீர் விட்டு விழுதாக அரைத்து நெய் சேர்த்து வதக்கவும். தர்பூசணி தோல் நீக்கி மசித்து சேர்க்கவும்.  திரண்டு வரும் போது சர்க்கரை சேர்த்துக் கரைந்தபின் நெய் சேர்த்துத் திரளும் வரை கிளறி ஏலப்பொடி சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருளும் போது முந்திரி வறுத்துப் போட்டு இறக்கவும். 


திங்கள், 8 ஜூன், 2020

பீட்ரூட் அல்வா

                                                                
                     பீட்ரூட்  அல்வா
                  --------------------------------
தேவை :
--------------
பீட்ரூட்  --- 1/4 கிலோ
பால் ------1/4 லிட்டர்,
கோதுமை மாவு ---2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை  -----1/4 கிலோ,
நெய் --------100 கிராம்,
ஏலக்காய் ----5,
முந்திரிப்பருப்பு ----10 கிராம் 

செய்முறை :                                           
----------------------
பீட்ரூட்டைத் தோல் நீக்கி துருவி மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி  பாலோடு சேர்த்து வேகவிட்டு நன்கு மசித்து, சர்க்கரை சேர்த்து கரைந்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து ஏலப்பொடி சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல்  சுருளும் போது நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து இறக்கி டிரேயில் பரப்பி பரிமாறவும்.