திங்கள், 2 செப்டம்பர், 2013

சிகப்பரிசி புட்டு


தேவையானவை:
சிகப்பரிசி-1 கப்
கடலைப்பருப்பு- ½ கப்
வெல்லம்-250 கிராம்
ஏலக்காய்-5
நெய்-25 கிராம்
முந்திரி, திராட்சை – தலா 25 கிராம்



செய்முறை:
சிகப்பரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைசான மாவாக அரைத்து ஒரு சிட்டிகை உப்பு கலந்த நீரில் பிசிறி பிசைந்து கட்டிகளின்றி உதிரியாக அழுத்தி ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். கடலைபருப்பை பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழைந்துவிடாமல் மலர வேக வைத்து இறக்கி நீர் வடித்து ஆறிய பின் மிக்ஸியில் பொடிக்கவும்.
சிகப்பரிசி மாவுடன் விரும்பினால் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பூ சேர்த்து ஆவியில் வேக விடவும். இன்னொரு பர்னரில் கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீரைப்பாகு வைக்கவும். பாகு முதிர்ந்து வரும் போது கடலைப்பருப்பு பொடி , ஏலப்பொடி சேர்த்து கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.
வெந்த புட்டை இறக்கி அகலமான பாத்திரத்தில் கொட்டி நெய் சேர்த்து கிளறி , வெல்லம் பருப்பு கலவை சேர்த்து மசித்து கிளறவும். நெய்யில் வறுத்த திராட்சை முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.

தயிர் கோதுமை அரிசி


தேவையானவை:
கோதுமைக்குருணை-1 கப்
பால்-2 கப்
தயிர்-1/4 கப்
பச்சை மிளகாய்- 4
இஞ்சி- சின்ன துண்டு
மல்லித்தழை-சிறிதளவு
வெண்ணெய்-1 டீஸ்பூன்
எண்ணெய்,உப்பு- தேவைக்கேற்ப




செய்முறை:
கோதுமைக்குருணையை ஒரு கப் தண்ணீரில் அரை மணி  நேரம் ஊறப்போடவும். பிறகு பால் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். ஸ்டீம் தணிந்தவுடன் குக்கரை திறக்கும் போது சாதம் மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது வெந்நீர் சேர்த்து மசிக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி கிளறி மல்லித்தழை சேர்க்கவும். சாதம் சிறிது ஆறிய பின் தயிரும், வெண்ணையும் சேர்த்து கிளறவும்.

கோகனட் ரைஸ்


தேவையானவை:
பச்சரிசி-1 கப்
முற்றிய தேங்காய்-1 பெரிய மூடி
கடுகு-1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1 டீஸ்பூன்
கடலை பருப்பு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிதளவு
பச்சைமிளகாய்-4
எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப





செய்முறை:
பச்சரிசியுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் பொலப்பொலப்பான சாதம் ஆக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் நறுக்கி போட்டு தேங்காய்ப்பூ சேர்த்து மிதமான தணலில் சிவக்க வறுக்கவும். வறுக்கும் போதே உப்பு சேர்க்கவும்.
அகலமான பாத்திரத்தில் சாதத்தை கொட்டி ஆறவைத்த பின்  தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக கிளறவும். விரும்பினால் கடைசியாக் இரண்டு வரமிளகாய் எண்ணெயில் தாளித்து சேர்க்கலாம்.

புளியோதரை


தேவையானவை:
பச்சரிசி-1 கப்,
புளி- 1 பெரிய எலுமிச்சை பழம் அளவு
நல்லெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு-1 டேபிஸ் ஸ்பூன்
கட்டிப்பெருங்காயம்-சின்ன துண்டு
வர மிளகாய்-5
கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி-1/4 டீஸ்பூன்
தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை-1/4 கப்



வறுத்து பொடிக்க:
வெந்தயம்-1டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
தனியா-1 டீஸ்பூன்
வரமிளகாய்-1( காரம் அதிகம் வேண்டாமென்றால் மிளகாயை நீக்கிவிடலாம்)
இவை அனைத்தும் வறுத்துப் பொடித்து புளியோதரைப் பொடியாக்க வேண்டும்.

செய்முறை:
புளியை ஊற வைத்து வடிக்கட்டி கொள்ளவும். வாணலியில்  நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு,கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பின் அத்தோடு புளிக்கரைசலை சேர்க்கவும். மஞ்சள் பொடி , உப்பு போடவும். பெருங்காயத்தை வறுத்து பொடி பண்ணி போட்டு அடிக்கடி கிளறி விடவும். நன்கு கொதித்து திக்காகி எண்ணெய் சிகப்பு நிறத்தில் கொப்பளிக்கும் போது புளியோதரைப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.இதனுடன் வேர்க்கடலை சேர்த்து கிளறவும்.
ஒரு கப் அரிசியுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் சாதமாக்கி இறக்கவும். சாதத்தை பொல பொலப்பாக உதிர்த்து விட்டு புளிக்காய்ச்சல் சேர்த்து கிளறவும். இதற்கு தொட்டுக்கொள்ள துவையல்கள், வறுவல்கள், காரக்கறிகள், கூட்டு , அப்பளம் இவை எல்லாம் பொருத்தமாக இருக்கும்.

சேமியா மசாலா கிச்சடி


தேவையானவை:
வெர்மிசெல்லி சேமியா-200 கிராம்
தக்காளி-1/4 கிலோ
பூண்டு -4 பல்
இஞ்சி- விரற்கடை அளவு
பச்சைமிளகாய்-2
பெரிய வெங்காயம்-1
பிரியாணி மசாலாப்பொடி-1 டீஸ்பூன்
நெய்-2 டீஸ்பூன்
புதினா, மல்லித்தழை பொடியாக நறுக்கி-2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு



செய்முறை:
சேமியாவை கொதித்த நீரில் ஒரு நிமிடம் மூழ்கவிட்டு நீர் வடிக்கவும். இஞ்சி, பூண்டை மிக்சியில் விழுதாக அரைக்கவும். தக்காளியை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா இரண்டு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் தக்காளி சாறு சேர்க்கவும். உப்பு பிரியாணி மசாலா சேர்த்து சுருண்டு வரும் போது சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும். நெய் சேர்க்கவும். விரும்பினால் ஒரு மூடி எலுமிச்சை பழம் பிழிந்து விட்டு கிளறி இறக்கவும்.

ரவா வெஜிடேபிள் கிச்சடி


தேவையானவை:
பாம்பே ரவை-1 கப்
பீட் ரூட், நூல்கோல், பச்சை பட்டாணி போன்ற சில காய்கள் துண்டுகளாக நறுக்கி-1 கப்
பெரிய வெங்காயம்-1 சின்ன வெங்காயம்-1
தக்காளி-1
பச்சைமிளகாய்-4
இஞ்சித்துருவல்-1 டீஸ்பூன்
புதினா, மல்லித்தழை- சிறிதளவு
எலுமிச்சைப்பழம்-1 மூடி
நெய்- 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி-/4 டீஸ்பூன்



செய்முறை
பாம்பே ரவையை வறுக்க வேண்டாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பச்சை மிளகாய், தக்காளி , வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிப்போட்டு வதக்கிய பின் காய்களை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புதினா உப்பு , மஞ்சள் பொடு , மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்களை வேக விடவும். ரவையை தூவி கிளறவும். மசித்து கிளறி குழைவாக வெந்ததும் நெய், லெமன் ஜூஸ் சேர்த்து கிளறி மல்லித்தழை சேர்க்கவும்.