வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஆடிக்கும்மாயம்

                                  ஆடிக்கும்மாயம்


தேவையானவை:

வெள்ளை உளுந்து-1 கப்
பச்சரிசி-1/2 கப்
வெல்லம்-300 கிராம்
நெய்-150 கிராம்
ஏலக்காய்-6
முந்திரி, திராட்சை-தலா 20 கிராம்

செய்முறை:
        
உளுந்தம்பருப்பு , பச்சரிசியை ஒன்றாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆற வைத்து மாவாக பொடிக்கவும். 2 ½ கப் வெது வெதுப்பான நீரில் கரைத்து வைக்கவும். வெல்லத்தைக் கொதித்த நீரில் கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும். இன்னொரு அடுப்பில் குறைவான தணலில் கரைத்த மாவை வைத்துக் கிளறவும். மாவு வெந்ததும் முதிர்ந்த வெல்லப்பாகைச் சேர்த்துக் கிளறவும். ஏலப்பொடி , நெய் , நெய்யில் வறுத்த திராட்சை , முந்திரி சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் இறக்கி வைக்கவும்.
இது காரைக்குடி ஸ்பெஷல்.செட்டி நாட்டவரின் பராம்பரியமான  இந்த  உணவு அற்புத சுவை மிக்கது. புரதத்தோடு, இரும்பும்  நார்ச்சத்தும் கொண்டது.
-       லலிதா சண்முகம்,

வியாழன், 26 டிசம்பர், 2013

மெதுவடை

மெதுவடை


தேவையானவை;
                  வெள்ளை  உளுந்தம்பருப்பு-1 கப்,
பச்சைமிளகாய்- 4,
இஞ்சி- சின்னத்துண்டு,
மிளகு-1 டேபிள் ஸ்பூன் ,
உப்பு,
எண்ணெய்- தேவைக்கு.

செய்முறை;
                 உளுந்தம் பருப்பை  முக்கால் மணி  நேரம்  ஊறவைத்து  நீர்  வடித்து 
 பச்சைமிளகாய்,இஞ்சி, உப்பு  சேர்த்து  அவ்வப்போது  நீர்  தெளித்துப் 
பொங்கப்  பொங்க  அரைக்கவும். பஞ்சுப்  பொதி  போல  மசிந்த  மாவை 
எடுத்து  மிளகை   ஒன்றி ரண்டாக  உடைத்துப்  போட்டுப்  பிசைந்து 
காய்ந்த  எண்ணெயில்  வடைகளாகத்  தட்டிப்  போட்டு  திருப்பிப் 
போட்டு  வேகவைத்து  எடுக்கவும்.
          இந்தச்  சுவையான  வடையை  பொங்கலோடு  சாப்பிடும்போது 
மிகவும்  நன்றாக  இருக்கும்.

கதம்பக் காய்க் கூட்டு

கதம்பக்  காய்க் கூட்டு 




தேவையானவை;
                       பூசனி, பரங்கி,
 அவரை,
 கத்தரிக்காய்,
 வாழைக்காய்,
கேரட்,
 சர்க்கரைவள்ளிக் கிழங்கு  போன்ற  காய்கறிகள்- தலா  சில துண்டுகள்
 துவரம்பருப்பு-1/2கப் ,
மஞ்சள்பொடி,
 மிளகாய்ப்பொடி,
 மல்லிபொடி,
சீரகப்பொடி- தலா  1/2 டீஸ்ப்பூன்,
 புளி- நெல்லிக்காயளவு,
 அரைத்த
 தேங்காய் விழுது-1 டேபிள்ஸ் பூன்,
 மல்லிதழை-சிறிதளவு,
  உப்பு,
எண்ணெய்-தேவைக்கு
 தாளிக்க;
 கடுகு,
 உளுத்தம்பருப்பு- தலா 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை-சிறிது.

  செய்முறை;
                         துவரம்பருப்புடன்  மஞ்சள்பொடி. நீர் சேர்த்து  வேகவிடவும்.காய்களில் நீர்  மிளகாய், மல்லி, சீரகப்போடிகள்  உப்பு  சேர்த்து தனியாக  வேகவிடவும்.காய்கள் வெந்ததும்  புளித் தண்ணீர் சேர்க்கவும்.வெந்த  துவரம்பருப்பைச்  சேர்க்கவும்.தாளிக்கும்  பொருட்களைக்  காய்ந்த  எண்ணெயில்  தாளித்துக்  கொட்டவும்.தேங்காய் விழுது சேர்த்துக்  கிளறி  இறக்கவும். மல்லிதழை  தூவவும். இந்தப் பொங்கல்  விருந்துக்  கூட்டணி  இந்தக்  கூட்டு  இன்றி  சோபிக்காது.

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப்  பொங்கல் 


  தேவையானவை ;

  பச்சரிசி-  1 கப்,
  பாசிப்பருப்பு- 1/2 கப்,
  பால்- 1/2 கப்,
  வெல்லம்- 1/2கிலோ,
  நெய்- 150 கிராம்,
  ஏலக்காய்- 6,
  திராட்சை,
  முந்திரி- தலா  25 கிராம்.

 செய்முறை;
            பாலுடன்  4 கப்  தண்ணீர்  சேர்த்துக்   கொதிக்க  விடவும். பாசிப்பருப்பை
வெறும்  வாணலியில் வறுத்துப்  பச்சரிசியுடன்  சேர்த்துப்  போடவும்.
வெல்லத்தை  வெந்நீரில்  கரைத்து  வடிகட்டிப்  பாகு  வைக்கவும்.
அரிசியும்,  பருப்பும்  குழைவாக  வெந்ததும்  முதிர்ந்த  வெள்ளப்பாகைச்
சேர்த்து  மசித்துக்  கிளறவும்.நெய், நெய்யில்   வறுத்த திராட்சை,
முந்திரி, ஏலப்பொடி  சேர்த்துக்  கிளறி  இறக்கவும்.

வெண்பொங்கல்

வெண்பொங்கல் 


தேவையானவை 

பச்சரிசி- 1 கப், பாசிப்பருப்பு- 1/2 கப் , 
நெய்- 150 கிராம்,
முந்திரிப்பருப்பு- 25 கிராம்,மிளகு,
 சீரகம்- தலா- 1 டீஸ்பூன்,
 இஞ்சி- சின்ன  துண்டு,
 மல்லிதழை- சிறிது,
  உப்பு - தேவைக்கு

செய்முறை;

ஒரு கப்  பாலுடன்  நாலு  கப்  தண்ணீர்  சேர்த்துக்  கொதிக்கவிட்டு  பச்சரிசி,
பாசிப்பருப்பு, உப்பு  போட்டுக்  குழைவாக  வேகவிடவும்.மிளகு. சீரகம் 
நெய்யில்  பொரித்துப்  போடவும்.இஞ்சியைத்  துருவி  நெய்யில் வதக்கிப்  போடவும்.நெய், நெய்யில்  வறுத்த  முந்திரி  சேர்த்துக்கிளறவும்.
மல்லிதழை  சேர்த்துக்  கிளறி  இறக்கவும்.


செவ்வாய், 24 டிசம்பர், 2013

வெந்தயக்குழம்பு

                                  வெந்தயக்குழம்பு


தேவையானவை:

சின்ன வெங்காயம் – 1 கைப்பிடியளவு
பூண்டு-10 பல்
வெந்தயம்-1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
மல்லிப்பொடி-2 டீஸ்பூன்
மிளகாய் பொடி -1 டீஸ்பூன்
புளி- எலுமிச்சையளவு
எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப
மல்லித்தழை- சிறிதளவு.

செய்முறை:   
   புளியை ஊறவைத்து கரைத்து சக்கை நீக்கவும். வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிக்கும் பொருட்கள் தாளித்து உரித்த சின்ன வெங்காயம் , பூண்டு பற்கள் சேர்த்து பொன்னிறமாக வதங்கிய பின் புளித்தண்ணீர் சேர்க்கவும்.மிளகாய் பொடி, மஞ்சள் பொடி , மல்லிப்பொடி , உப்பு சேர்த்து போதுமான நீர் விட்டு கொதிக்க விடவும்.குழம்பு எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

கரு வடாம் குழம்பு

                                 கரு வடாம் குழம்பு


தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் சைஸ் கருவடாம்-2
புளி- எலுமிச்சையளவு
பூண்டு-10 பல்
தக்காளி-1
மல்லிப்பொடி-2 டீஸ்பூன்
மிளகாய்பொடி-1டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/4 டீஸ்பூன்
மல்லித்தழை- சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்- தலா ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:
புளியை ஊறவைத்து கரைத்து சக்கை நீக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை தாளித்து பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.பூண்டு பற்களையும் சேர்த்து மிதமான தணலில் பொங்கி விடாமல் சிறிது நேரம் வதங்கிய பின் புளித்தண்ணீர் சேர்க்கவும்.உப்பு, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லித்தழை போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.குழம்பு திக்காகி எண்ணெய் பிரியும் போது இன்னொரு அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கருவடாம்களை உடைத்துப்போட்டு  பொரிய விட்டு குழம்பில்  கொட்டி கிளறி இறக்கி வைக்கவும்.
-------

மணத்தக்காளி வற்றல் குழம்பு

மணத்தக்காளி வற்றல் குழம்பு


தேவையானவை:
மணத்தக்காளி வற்றல் -1/4 கப்,
சின்ன வெங்காயம்- கைப்பிடியளவு
பூண்டு -6 பல்
புளி- ஒரு சின்ன எலுமிச்சையளவு
மிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி- 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
மல்லித்தழை- சிறிதளவு
தக்காளி-1
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்- தலா ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு.


செய்முறை:

புளியை ஊற வைத்து கரைத்துச் சக்கை நீக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிக்கும் பொருட்கள் தாளித்து, உரித்த வெங்காயம், பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துப் பொன்னிறமாக வதங்கிய பின் புளி நீர் சேர்க்கவும். மஞ்சள் பொடி, மல்லிப்பொடி , மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து போதுமான  நீர் விட்டு கிளறி கொதிக்க விடவும்.
குழம்பில் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது ( விரும்பினால் இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கலாம்) இன்னொரு அடுப்பில் எண்ணெய் காயவைத்து மணத்தக்காளி வற்றலை வறுத்து  கொதிக்கும் குழம்பில் கொட்டி  குழம்பை இறக்கி கிளறி விட்டு பரிமாறவும்.

வியாழன், 19 டிசம்பர், 2013

காராமணிப்பயறு குழம்பு

காராமணிப்பயறு குழம்பு


தேவையானவை:
காரமணிப்பயறு – ½ கப்
சின்ன வெங்காயம் – கைப்பிடியளவு
பூண்டு- 6 பல்
தக்காளி-1
தேங்காய்ப்பூ-1 டேபிள் ஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
மல்லித்தூள்-2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மல்லித்தழை- சிறிதளவு

செய்முறை:    
      காரமணிப்பயிறைக் குறைந்தது  நான்கு மணி நேரம் ஊறவைத்து நீர் வடித்து மூழ்கும் வரை சுத்தமான நீர் விட்டு மலர் வேக வைக்கவும். புளியை ஊறவைத்து கரைத்து சக்கை நீக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளித்து உரித்த வெங்காயம், பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி காராமணிப் பயறுடன் சேர்த்து புளி நீர் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து போதுமான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.குழம்பு பக்குவமாகி எண்ணெய் பிரியும் வேளையில் தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி மல்லித்தழை சேர்த்து கிளறிவிடவும்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

புளிச்சக்கீரை கடையல்

புளிச்சக்கீரை  கடையல் 


தேவையானவை 


குசிகள்  நீக்கிய  புளிச்சக்கீரை  மட்டும்  4 கைப்பிடி , பெரிய வெங்காயம் - 1,

பச்சைமிளகாய்- 4,உப்பு,எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;  கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம்- தலா  1/4 டீஸ்பூன் ,மிளகாய் வற்றல்- 4.

செய்முறை 

புளிச்சக்கீரையைக்  கொதிக்கும்  நீரில்  மூல்கும்வரைப்  போட்டு  வேகவைத்து  நீர்  வடித்து
வைக்கவும் .வாணலியில்  எண்ணெய்  காயவைதுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து 

நீளவாக்கில் நறுக்கிய  பச்சைமிளகாய் , பொடியாக  நறுக்கிய வெங்காயம் சேர்த்து  வதக்கவும்.

 புளிச்சக்கீரையை மத்தினால்  கடைந்து  [ அல்லது  மிக்ஸியில்  சுற்றி ] வ தக்கியவற்றை 

அத்துடன்  கலக்கவும்.விரும்பினால்  கருவடாம்  ஓன்று  எண்ணெயில்  பொரித்துக்  கொட்டிக் 

கிளறவும்.இரும்புச்  சத்து  நிறைந்த  இந்தக்  கீரைக்  கடையலை சாதத்தில்  சிறிது 

 நல்லெண்ணெய் சேர்த்துப்  பிசைந்து  சாப்பிட  சுவையாக  இருக்கும்.

சேமியா தயிர் பாத்

சேமியா  தயிர் பாத் 



தேவையானவை;

சேமியா- 100 கிராம்,  தயிர்- 1கப் , பச்சை  மிளகாய்-2, இஞ்சித் துருவல் - 1/2 டீஸ்பூன்,

முந்திரிப்பருப்பு- 20 கிராம், மல்லித்தழை- சிறிதளவு, உப்பு, எண்ணெய்  தேவைக்கு.

தாளிக்க; கடுகு. உளுந்தம்பருப்பு- தலா 1/4டீஸ்பூன் ,கறிவேப்பிலை-சிறிதளவு.


செய்முறை;


            கொதிக்கும்  நீரில்  சேமியாவைத்  தேவையான  உப்பு  சேர்த்து மூழ்கும்  வரைப்போட்டு  அடுப்பை அணைக்கவும்.ஒரு  நிமிடம்  மட்டும்  மூடி  வைத்தபின்  நீரை  வடித்துவிட்டு  மறுபடியும்  சேமியாவை மூடி  வைக்கவும்.

                வாணலியில்  எண்ணெய்விட்டு  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  நறுக்கிய  பச்சை மிளகாய்,இஞ்சித் துருவல்  சேர்த்து  ஒரு  நிமிடம்  வதக்கியபின் ஆறிய சேமியாவில்  சேர்த்துக் கலக்கவும்.தயிர்  சேர்த்துக் கிளறவும். முந்திரிப்பருப்பை  நெய்யில்  வறுத்துப் போடவும்.பொடியாக  நறுக்கிய மல்லிதழை  தூவிக் கிளறிப்  பரிமாறவும்.
       
           இதற்கு  ஊறுகாய்  தொட்டுக்  கொள்ளலாம்.    

சனி, 14 டிசம்பர், 2013

முட்டை சாட் மசாலா

முட்டை  சாட்  மசாலா 





தேவையானவை 

கோழிமுட்டை-3,  பெரியவெங்காயம்-1,தக்காளி-1,  இஞ்சி, பூண்டு விழுது -2 டீஸ்பூன் ,மஞ்சள்பொடி, 1/4 டீஸ்பூன் ,

மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடி- தலா  1/2 டீஸ்பூன் ,மல்லிப்பொடி-1 டீஸ்பூன் , மல்லி,  புதினா- -சிறிதளவு 

 எண்ணெய் உப்பு,-தேவைக்கு.

தாளிக்க-பட்டை, கிராம்பு, ஏலக்காய்- தலா 2

செய்முறை;


முட்டைகளை  மூழ்கும் வரை  நீரில்  போட்டு  சற்றுக் கெட்டியாக  அவித்து  எடுத்துப்  பச்சைத்  தண்ணீரில் 

போடவும்.வாணலியில்  எண்ணெய்  காயவைத்து  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக  நறுக்கிய  தக்காளி  

வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது , புதினா, மல்லித் தழை  சேர்த்து  வதக்கவும் .மஞ்சள், மிளகாய், மல்லி, மிளகு,

சீரகப் பொடிகள், உப்பு  சேர்க்கவும்.போதுமான  நீர்விட்டுக் கே கொதிக்கவிடவும்.குலம்பாகும்போது. தோலுரித்த  முட்டைகளை  இரண்டிரண்டாக 

வெட்டி  ஒவ்வொரு  துண்டாகக் குழம்பில்  போடவும்.கரண்டியினால்  குழம்பைச் சிறிது  சிறிதாக  எடுத்து  முட்டைகள்  மீது 

விடவும்.வெண்கரு  மஞ்சள்கரு  பிரிந்துவிடாமல்  மெல்லப்  புரட்டிவிட்டுத்  தண்ணீர் வற்றியதும்  கிளறி இறக்கவும்.
           
                 இந்த  மசாலாவை  சப்பாத்தி யோடும் , சாப்படோடும்  சைட்  டிஷ்  ஆகச் சாப்பிடலாம்.
                                                                                                                                              
                                                                                                                                                                                         

முட்டைகுழம்பு

முட்டைகுழம்பு 



தேவையானவை:

கோழி முட்டை -4,  பெரிய வெங்காயம் -1, பூண்டு - 6பல் ,

தக்காளி  -2,புளி - சிறிது , மிளகாய்ப்பொடி -1 டீஸ்பூன் ,

மல்லிப்பொடி  1 டேபிள் ஸ்பூன் ,மஞ்சள்பொடி  1/2 டீஸ்பூன் 

சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்  உப்பு .  எண்ணெய்   -தேவைக்கு 

தேங்காய்ப்பூ - 2டேபிள் ஸ்பூன் , மல்லி.  புதினாத் தழை - சிறிது ,

தாளிக்க  -பட்டை - சின்ன துண்டு  ஏலக்காய் . கிராம்பு - தலா 2.

செய்முறை ;

    வாணலியில்   எண்ணெய்   காயவைத்து  தாளிக்கும்  பொருட்கள்   தாளித்து  பொடியாக 

நறுக்கிய தக்காளி , வெங்காயம்   சேர்த்து  வதக்கியபின்   புளி கரைத்த  நீர் .மஞ்சள் ,மிளகாய் , 
மல்லி , சீரகப் பொடிகள் , உப்பு ,சேர்த்துப்  போதுமான  நீர்விட்டு  கிளறிக்  குழம்பாகக்  கொதிக்க 
 விடவும்.குழம்பு  சற்று   நீர்க்க  இருப்பது  முக்கியம் . குழம்பு   முதிர்ந்த  நிலைக்கு  வரும்போது  தேங்காய் விழுது  சேர்த்துக்  கொதித்தபின்  அடுப்பை   மிகவும்  குறைத்து வைக்கவும்.
                குழம்பு   கொதிநிலை  தணிந்ததும்  வாணலிக்கு  மேலாக  முட்டையைப்   படுக்கை வாக்கில் தூக்கிப்  பிடித்து  கத்தியினால்  முட்டையின்  நடுவில்  இரண்டாக  உடைத்து  விடவும் .இப்படியே  மற்ற முட்டைகளையும்  இடைவெளி   விட்டு  விட்டு   உடைத்து  விடவும் . வெண்கரு க்கள்  சற்று  கெட்டியானதும் அடுப்பைத்  தூண்டிவிடவும். மஞ்சள் கருக்களும்  வேக ஆரம்பிக்கும்போது குழம்பைக்  கரண்டியால்  கிளறாமல் , வாணலியின்  இரு  கைபிடிகளையும்  துணியால்  பிடித்து  லேசாக  ஆட்டிவியவும் .மஞ்சள் , வெள்ளை கருக்கள்  நன்கு  வெந்ததும்  குழம்பை  இறக்கி   மல்லித்தழைத்  தூவிப்  பரிமாறவும்.

              இந்தக்  குழம்பை  சாதத்தில்   பிசைந்து  சாப்பிட  சுவையாக  இருக்கும்.

வியாழன், 12 டிசம்பர், 2013

கத்தரிக்காய் வதக்கல்

கத்தரிக்காய் வதக்கல் 

தேவையானவை :

கத்தரிக்காய் -4. தக்காளி -1.பெரிய வெங்காயம் . 1.
இஞ்சி  பூண்டு  விழுது -1டேபிள் ஸ்பூன் . 
சோம்புப் பொடி -1/2 டீஸ்பூன் . .மிளகாய்ப் பொடி .-1/2டீஸ்பூன்.
மல்லிப் பொடி .-1/2 டீஸ்பூன் .கரம் மசால் பொடி  -1/2 டீஸ்பூன் .
எண்ணெய் . உப்பு -தேவைக்கு 
தாளிக்க -கடுகு . உளுந்தம் பருப்பு -தலா 1/4 டீஸ்பூன் .
கறிவேப்பிலை  சிறிதளவு 

செய்முறை :

கத்தரிக்காயை நீளவாக்கில்  துண்டுகளாக  நறுக்கவும் .வாணலியில்  எண்ணெய்  காயவைத்து  தாளிக்கும் பொருட்களைத்  தாளித்து  பொடியாக  நறுக்கிய  தக்காளி , வெங்காயம்  சேர்த்து  வதக்கவும் . நன்றாக  வதங்கிய .பின் கத்தரிக்காய்  துண்டுகளை  சேர்த்து  வதக்கவும் .இஞ்சி  பூண்டு  விழுது சேர்க்கவும் .நன்கு வதங்கியபின் மஞ்சள்பொடி , மிளகாய்ப் பொடி ,மல்லிப்பொடி , சோம்புப்பொடி ,கரம் மசால்பொடி , உப்பு சேர்த்துச்  சிறிது  நீர்விட்டு புரட்டிவிடவும் .காய்கள் வெந்ததும் நீர்  வற்றும் வரை  சுருளக்  கிளறி இறக்கவும் . மல்லிதழை  தூவிப்  பரிமாறவும் .

திங்கள், 9 டிசம்பர், 2013

இனிப்பு கேரட் சப்பாத்தி

இனிப்பு கேரட் சப்பாத்தி



தேவையானவை:
பெரிய கேரட்-2
சர்க்கரை-100 கிராம்
பால்-1/4 லி
நெய்-1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-5
முந்திரி-25 கிராம்
திராட்சை-25 கிராம்

செய்முறை:
                  கேரட்டை தோல் நீக்கி சீவி தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் இரண்டு சுற்று ஓடவிட்டு, பிறகு கால் டம்ளர் பால் விட்டு வேகவிடவும். மீதி பாலை சுண்ட காய்ச்சி இந்த கலவையில் ஊற்றி அடி பிடிக்காமல் கிளறவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாகு முதிர்ந்து வரும் போது இந்த கலவையை கொட்டி ஏலப்பொடி , நெய் சேர்த்து கிளறவும்.பாத்திரத்தில் சுருண்டு ஒட்டாமல் வரும் போது முந்திரி, திராட்சை வறுத்து போட்டு கிளறி இறக்கி விடவும்.இதை சப்பாத்தியின் நடுவில் வைத்து சுருட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

சொதி

சொதி



தேவையானவை:
உருளைக்கிழங்கு-1/4 கிலோ
முற்றிய பெரிய தேங்காய்-1
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
பூண்டு பல்-6
தக்காளி-2
எலுமிச்சம் பழம்-1
மல்லி, புதினா, கறிவேப்பிலை – தலா சிறிதளவு
சீரக்ப்பொடி, மிளகாய்ப்பொடி – ½ டீஸ்பூன்
மல்லிப்பொடி-1 டீஸ்பூன்

செய்முறை:

            உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியையும் மெல்லிதாக நறுக்கவும்.தேங்காயை மிக்சியில் அரைத்து பால் எடுக்கவும்.கெட்டியான பாலை தனியாக வைத்து விட்டு மிச்சம் உள்ள தேங்காய் சக்கையில் தண்ணீர் ஊற்றி பிழிந்து நீரை தனியே வைக்கவும்.வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கிராம்பு, லவங்கப்பட்டை,ஏலக்காய் தலா-இரண்டு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி பூண்டு, பச்சை மிளகாயை நறுக்கி போட்டு வதங்கியதும், உருளைக்கிழங்கையும் சேர்த்து குக்கரில் போட்டு தேங்காய் சக்கையில் பிழிந்த நீரை ஊற்றி உப்பு, சீரகப்பொட், மிளகாய்ப்பொடி,மல்லிப்பொடி , கறிவேப்பிலை,மல்லி, புதினா போட்டு நன்கு புரட்டி போட்டு இவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ப்ரஷர் தணிந்ததும் மீண்டும் அடுப்பில் வைத்து கிளறி கெட்டியான தேங்காய்ப் பாலை ஊற்றி பொங்கி வரும் போது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சொதி ரெடி.


வியாழன், 5 டிசம்பர், 2013

தேங்காய்ப்பால் புலாவ்

தேங்காய்ப்பால் புலாவ்



தேவையானவை;

பச்சரிசி-2 கப்
முற்றிய தேங்காய்-1
நெய்-50 கிராம்
பூண்டு-10 பல்
இஞ்சி-சிறிதளவு
பெரிய வெங்காயம்-1
முந்திரி பருப்பு- 100 கிராம்
எலுமிச்சை பழம்- 1 மூடி
தக்காளி-2
பச்சை மிளகாய்-2

செய்முறை:

    தேங்காயை அரைத்துப் பால்  எடுக்கவும்.இஞ்சி பூண்டை விழுதாக்கவும்.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பச்சரிசியை களைந்து நீர் வடித்து தேங்காய் பாலோடு தண்ணீர் சேர்த்து ஐந்து கப் ஊற்றி வைக்கவும்.வாணலியில் எண்ணெய், கொஞ்சம்  நெய் சேர்த்து 2 பிரிஞ்சி இலை, 2 கிராம்பு ,2 பட்டை போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி அத்துடன் பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் ,புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்கி எல்லாவற்றையும் தேங்காய் பாலில் ஊறிக்கொண்டிருக்கும் அரிசியுடன் சேர்த்து குக்கரில் வைக்கவும். ஒரு விசில் வந்ததும் சிம்மில்  மூன்று நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.  ப்ரஷர் இறங்கியதும் நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகளையும், எலுமிச்சை சாறும் சேர்த்து கிளறவும்.காரம் விரும்புபவர்கள் குக்கர் வைக்கும் போது அரிசிக்கலவையுடன் கொஞ்சம் பிரியாணி பொடி சேர்த்துக் கொள்ளலாம்.


வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் பொரியல்



தேவையானவை:

வெண்டைக்காய்-1/4 கிலோ
தயிர்- 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி- 1 கால் டீஸ்பூன்
தேங்காய்ப்பூ-1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-4
உப்பு,எண்ணெய்- தேவைக்கு
மல்லித்தழை- சிறிதளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு-1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு

செய்முறை:

       வெண்டைக்காயை வட்டமாக வில்லைகள் போல நறுக்கவும். தயிர், மஞ்சள் பொடி, உப்பு பொடி சேர்த்து  நன்கு பிசிறி சில நிமிடங்கள் வைத்திருக்கவும்.வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிக்கும் பொருட்களை தாளித்து , பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அத்துடன் வெண்டைக்காயை சேர்த்து கிளறவும். காய்கள் வெந்து குழ குழப்பு மறைந்ததும் தேங்காய் சேர்த்து கிளறி பொல பொலப்பாக இறக்கி, மல்லித்தழை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.


வாழைப்பூ பொன்னாங்கண்ணி கூட்டு

வாழைப்பூ பொன்னாங்கண்ணி கூட்டு


தேவையானவை:

சிறிய வாழைப்பூ-1
பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரை-1 கப்
பாசிப்பருப்பு-1/4 கப்
மிளகாய்த்தூள்-1/2 டீஸ்பூன்
பூண்டு- 4 பல்
தேங்காய்ப்பூ-2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை:

         வாழைப்பூவை ஆய்ந்து பொடியாக நறுக்கிய பின் மோர்-1/2 கப், உப்பு, மஞ்சள் பொடி கலந்த நீரில் வேக வைக்கவும்.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு நசுக்கிப்போட்டு வேக வைத்து எடுக்கவும். விரும்பினால் 1 தக்காளியும் சேர்க்கலாம்.பாசிப்பருப்பை மலர வேகவைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கலாம்.வாழைப்பூழை நீர் வடித்து சேர்த்து வெந்த பொன்னாங்கண்ணியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி  சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு  சற்று தளர்ச்சியாக விட்டு இறக்கி வைக்கவும்.


வாழைப்பூ பொரியல்

வாழைப்பூ பொரியல்


தேவையானவை:

சிறிய வாழைப்பூ-1
பாசிப்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
தேங்காய்ப்பூ- 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவைக்கு
மல்லித்தழை- சிறிதளவு

தாளிக்க- கடுகு, உளுந்தம்பருப்பு- ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு

செய்முறை :

           வாழைப்பூவை ஆய்ந்து பொடியாக நறுக்கி ½ கப் மோர், ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்த  நீரில் அமிழ்த்தவும். அப்படியே உப்பு சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.பாசிப்பருப்பை சேர்த்து சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வெந்ததும் மலர்வதற்கு முன்பு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து  கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி  வெந்த வாழைப்பூழை நீர் வடித்து சேர்த்து பாசிப்பருப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்கி , பொடியாக நறுக்கிய மல்லித்தழையை தூவி விடவும்.



உருளைக்கிழங்கு காரக்கறி

உருளைக்கிழங்கு காரக்கறி


தேவையானவை:

உருளைக்கிழங்கு- ¼ கிலோ
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
பூண்டு-4 பல்
புதினா, மல்லித்தழை-சிறிதளவு
கறிமசால் பொடி- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கு
தாளிக்க: கடுகு-1/2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு-1 டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு.

செய்முறை:

  உருளைக்கிழங்கு வேகவைத்து ஆறிய பின் சிறுதுண்டுகளாக்கவும்.அத்துடன் கறிமசால்தூள், உப்புத்தூள் சேர்த்து பிசிறி சில நிமிடங்கள் மூடி வைக்கவும். காரம் அதிகம் விரும்பினால், சிறிது மிளகாய் பொடி சேர்த்து கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்கள் தாளித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பூண்டை பொடியாக்கி போடவும். புதினாவை பொடியாக நறுக்கி போட்டு எல்லாம் நன்றாக வதங்கிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து தளர்ச்சியாக்கி அத்துடன் உருளைக்கிழங்கு சேர்த்து புரட்டவும்.பச்சை வாசனைப் போய் நல்ல மணத்துடன் பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.



ஓமப்பொடி

ஓமப்பொடி



தேவையானவை:

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு -3/4 கப்
ஓமம் – 1 டீஸ்பூன்
எண்ணெய் , உப்பு- தேவைக்கேற்ப
கறிவேப்பிலை- சிறிதளவு


செய்முறை:

               ஓமத்தை ஊறவைத்து அரைத்து வடிகட்டவும். கடலை மாவு, அரிசி மாவுடன் உப்புத்தூள் சேர்த்து கலந்து ஓம நீர் சேர்த்து பிசையவும். ஓமப்பொடி குழலில் பிழிந்தெடுத்து கறிவேப்பிலை எண்ணெயில் பொரித்து கலக்கவும்.

தேங்காய் துவையல்

தேங்காய் துவையல்


தேவையானவை:

தேங்காய் துருவல்- 1 மூடி
புளி- சிறிதளவு
பச்சை மிளகாய்-4
இஞ்சி-சின்ன துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு- ½ டீஸ்பூன்

செய்முறை:
       வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன் தேங்காய்ப்பூ சேர்த்து வறுத்து ஆறவைத்து உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து சற்று தளர்ச்சியாக அரைத்தெடுக்கவும்.சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.

கறிவேப்பிலை துவையல்

கறிவேப்பிலை துவையல்




தேவையானவை:

ஆய்ந்து சுத்தப்படுத்திய கறிவேப்பிலை-2 கைப்பிடி
தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்
புளி- ஒரு சின்ன எலுமிச்சை அளவு
வரமிளகாய்-5
உப்பு, எண்ணெய்- தேவைக்கு
தாளிக்க- கடுகு- அரை டீஸ்பூன்,  கடலைபருப்பு-டீஸ்பூன்  உளுந்து பருப்பு- 1 டீஸ்பூன்

செய்முறை:
       வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்கள் தாளித்து கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு பொரிந்ததும், தேங்காய்ப்பூ சேர்த்து எல்லாம் சிவக்க வறுத்து இறக்கி சில  நிமிடங்கள் ஆறவைத்த பின்  உப்பு, புளிக்கரைத்து தேவைக்கேற்ப சேர்த்து சற்றே தளர்ச்சியாக அரைத்து எடுக்கவும்.இந்த துவையலை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.இட்லி, தோசை , சப்பாத்தி, வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டு சாப்பிடலாம்.





நாட்டுகோழி மிளகு வறுவல்

நாட்டுகோழி  மிளகு  வறுவல் 



தேவையானவை:

நாட்டுக்கோழி -1/4 கிலோ ,
சின்னவெங்காயம் - கைப்பிடியளவு .
பூண்டு- 6பல்,
இஞ்சி -சின்னதுண்டு , தக்காளி-1,
புளி -சின்ன எலுமிச்சையளவு ,
மிளகாய்த் தூள் -1/2 டீஸ்பூன் ,
மல்லித்தூள் -1 டீஸ்பூன் ,
மஞ்சள்தூள் -1 டீஸ்பூன் ,
மிளகுத்தூள் -1டேபிள்ஸ்பூன் ,
கறிவேப்பிலை ,
மல்லிதழை -தலா  சிறிதளவு 
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு .
தாளிக்க ,
சீரகம் -1/2 டீஸ்பூன் , 
ஏலக்காய், 
கிராம்பு -தலா  2,
பட்டை  சின்னதுண்டு .


செய்முறை;

  பிரஷர்  பேனில்  விட்டு  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  பொடியாக  நறுக்கிய சின்னவெங்காயம் ,தக்காளி  மற்றும்  கறிவேப்பிலை , இஞ்சி ,பூண்டு  சேர்த்து  வதக்கவும் . நாடுக்கொழியைப்  போட்டு  மஞ்சள் பொடி சேர்த்து  வதக்கவும் .மிளகாய்த்தூள் ,மல்லித்தூள்  சேர்த்துத்  தேவையான தண்ணீர்  விட்டுக்  கிளறவும் .உப்பு , மிளகுத்தூள்  மல்லிதழை  சேர்த்துக் கிளறி  மூடிப் பிரஷரில் வேகவிடவும் .6பிரஷர்  வந்ததும்  அடுப்பை அணைக்கவும். பிரஷர்  தணிந்ததும்  திறந்து  ஒரு  டேபிள்ஸ்பூன்  எண்ணெய்  விட்டு சுருளக் கிளறி இறக்கவும்.  மல்லிதழை  தூவவும் .


நாட்டுக் கோழி மசாலா

நாட்டுக்  கோழி  மசாலா 



தேவையானவை:

நாட்டுக்கோழி - 1/4 கிலோ . 
பெரிய  வெங்காயம் -1,
பூண்டு -6பல் 
இஞ்சி  - சின்ன துண்டு ,
தக்காளி - 1,
புளி ,- சின்ன உருண்டை ,
மிளகாய்த் தூள் -1டீஸ்பூன் ,
ஜீரகப்பொடி - 1டீஸ்பூன் 
மஞ்சள்பொடி , 1/2 டீஸ்பூன் 
மிளகுப்பொடி ,1டீஸ்பூன் ,
மல்லிபொடி ,-2டீஸ்பூன் ,
பச்சைமிளகாய் -2,
கறிவேப்பிலை -சிறிதளவு ,
மல்லித் தழை - சிறிதளவு ,
எண்ணெய் , உப்பு - தேவைக்கு 
தாளிக்க :  ஜீரகம் - 1/2டீஸ்பூன் , பட்டை-சின்ன துண்டு ,கிராம்பு ,ஏலக்காய் -தலா - 2.      


செய்முறை :

வாணலியில்  எண்ணெய்  விட்டு  தாளிக்கும்  பொருட்களைத்  தாளித்து ,கறிவேப்பிலை , பொடியாக  நறுக்கிய  தக்காளி ,வெங்காயம் சேர்த்து சிறிது  நேரம்  வதக்கியபின்,நாட்டுக்கோழி யைச்  சேர்த்து , மஞ்சள்பொடி  போட்டு கிளறவும்.விழுதாக  அரைத்த  இஞ்சி  பூண்டைச்  சேர்த்து  சில  நிமிடங்கள்  நன்கு வதக்கியபின்  மிளகாய்ப் பொடி , மல்லிப்பொடி , ஜீரகப்போடி ,மிளகுப்பொடி, உப்பு  சேர்த்துப்  புரட்டிவிட்டு  புளிகரைத்த  நீர்  விட்டு , தேவைக்கேற்ப  மேலும் சிறிது  நீர்  சேர்த்து  கிளறிவிட்டு மூடிப்  பிரஷரில்  வேகவிடவும். ஆறு விசில்  வந்ததும்  அடுப்பை  அணைக்கவும் .பிரஷர்  தணிந்ததும் குக்கரைத்  திறந்து விரும்பினால்  இரண்டு  டேபிள்ஸ்பூன்  அரைத்த  தேங்காய்  விழுது  சேர்த்துக்  கொதிக்கவிட்டுக்  கிளறித்  திக் காக  இறக்கவும். மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.இந்த  நாட்டுக்கோழி  மசாலா சாதத்தோடு  சாப்பிடலாம் .சப்பாத்தி,பரோட்டாவுடனும் சாப்பிடலாம்.