திங்கள், 21 செப்டம்பர், 2020

கத்தரிக்காய் தயிர்க் குழம்பு



               கத்தரிக்காய் தயிர்க் குழம்பு

                     ***************************

தேவை :

-----------------
                   பிஞ்சு கத்தரிக்காய்  ----- 4 ,      சின்ன வெங்காயம் ---- ஒரு கைப்பிடி,
                     பூண்டு பற்கள் -----     10,  தக்காளி ---- 2,     புளி --- சின்ன எலுமிச்சையளவு
                     தயிர் -----  2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் --- 2 டீஸ்பூன்,
                      கறி வடகம் ---- சின்ன சைஸ் 2,  கறிவேப்பிலை  ,மல்லித்தழை, புதினா ---
                                                                                                                                              தலா ---சிறிது 
                        மிளகாய்த்தூள் ---- 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன்,
                        மஞ்சள் தூள் ------  1/2. டீஸ்பூன்,
                       உப்பு, எண்ணெய் ------ தேவைக்கு ..

செய்முறை :

------------------------

                                     வாணலியில் எண்ணெய் காயவைத்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும், உரித்த சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், இரண்டு பச்சை மிளகாய்கள் ,தக்காளித் துண்டுகள் சேர்த்து நன்கு வதங்கும் போது, கத்தரிக்காய்களை நான்காக வகுந்து போட்டு, மஞ்சள் தூள், புதினா, மல்லித்தழை
 சேர்த்து காய்கள் சுருங்கும் வரை வதங்கியபின், புளித்தண்ணீர்  விட்டு மிளகாய்த் தூள், மல்லித்தூள்,  1/2 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்துப் போதுமான நீர் விட்டு காய்கள் குழைந்து, குழம்பு பச்சை  வாசனை போய்  திக்காகி எண்ணெய்  மிதக்கும் நிலையில், வெல்லம் போட்டு, தயிரைக் கலக்கி ஊற்றிக் கொதித்ததும், இன்னொரு பர்னரில், நல்லெண்ணெய் காயவைத்து  கறி வடாம் பொரித்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டிக் கிளறிவிட்டு இறக்கவும்..
  
                          சூடான சாதத்தோடு  பிசைந்து  சாப்பிட சூப்பர் குழம்பு . சுட்ட. அப்பளமும், பருப்புத் துணையானால் தேவாமிர்தம்  .

 

வியாழன், 17 செப்டம்பர், 2020

குதிரைவாலி பாயாசம்

                                குதிரைவாலி பாயாசம்

                   ++++++++++++++++++++++

   தேவை 

***********

           குதிரைவாலி அரிசி  ----  1/2 கப்,  

           பாசிப்பருப்பு  -----                   1/4 கப்,

           சர்க்கரை -----                            1 கப்,

          பால் --------                                    2 கப், 

          திராட்சை, முந்திரி  ------       தலா 20 கிராம்,

         ஏலக்காய் -------                          6

         நெய் -------                                  50 கிராம்,

         கடலைமாவு --------                1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

*****************

குதிரைவாலி, பாசிப்பருப்பை ஒன்றாக சிறிது நெய் சேர்த்து வறுத்து, 1 கப் பால், இரண்டு கப் நீர் சேர்த்து நன்கு குழைந்து  கரைந்ததும்  சர்க்கரை சேர்த்து, மீதி பாலையும் ஊற்றி ஏலப்பொடி போட்டு, கடலைமாவை நெய் சேர்த்து தளர்ச்சியாக. வாசம்  வர வறுத்து  பாயாசத்தில்  சேர்த்து, திராட்சை  முந்திரி  நெய்யில்  வறுத்து போட்டு  இறக்கவும். 



 

திங்கள், 14 செப்டம்பர், 2020

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு       

*************************************************************************

தேவை :          

----------------
             பிஞ்சு கத்தரிக்காய் ----- 4,
              சின்ன வெங்காயம்  ----- 1கைப்பிடி,
              பூண்டு பற்கள் ------ 6 ,
             புளி ------- சின்ன எலுமிச்சை அளவு,
              பச்சை மிளகாய்  ---- 4 , தக்காளி  --- சின்னதாக இரண்டு,
              மஞ்சள் பொடி ---- 1/4 டீஸ்பூன்,    மிளகாய்ப்பொடி ------ 1/2 டீஸ்பூன்,
              மல்லிப்பொடி ---  1 டீஸ்பூன், 
               சீரகப்பொடி ---- 1/2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, தயிர் - 2 டேபிள்ஸ்பூன் ,
                கறிவடகம் --- சின்ன சைஸ் 2 , வெல்லத்தூள் ----- 1 டீஸ்பூன்,
                 கறிவேப்பிலை ----- 1 ஆர்க்கு  ,உப்பு, எண்ணெய் ---  தேவைக்கு..

செய்முறை :

--------------------------
                    வாணலியில் எண்ணெய் காயவைத்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும், உரித்த வெங்காயம், பூண்டு பற்கள் தக்காளித் துண்டுகள் சேர்த்து நன்கு வதங்கியதும், நான்காக வகுந்த கத்தரிக்காய்களைச் சேர்த்து வதக்கி, காய்கள் நன்கு சுருங்கியதும், புளித்தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி ,மல்லிப்பொடி ,சீரகப்பொடி சேர்த்துப் போதுமான நீர் விட்டு கொதிக்கவிட்டு  பச்சை வாசனை போய்  நல்ல மணத்துடன், எண்ணெய் பிரியும் தருணத்தில் வெல்லம், தயிர் சேர்த்து கொதிக்க விட்டு, நல்லெண்ணெய் வேறு பர்னரில் காயவிட்டு கறிவடகம் உதிர்த்து விட்டுப் பொரிந்ததும் குழம்பில் கொட்டி இறக்கவும்.


      


 

வியாழன், 10 செப்டம்பர், 2020

வடைகறி

                               வடைகறி                                                              **********                           

 தேவை :            

------------

            கடலைப்பருப்பு ----- 1 கப்,       சோம்பு  ---- 1டீஸ்பூன்,  பச்சைமிளகாய் ---- 4 ,

            இஞ்சி - சின்ன துண்டு,    பெரிய வெங்காயம் ---- 1 ,    தக்காளி --- 1, 

             புதினா, மல்லி  --- தலா சிறிது.  எண்ணெய், உப்பு --- தேவைக்கு.         

 செய்முறை : 

--------------------

                     கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிட்டு  நீர் வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி  , சோம்பு, உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் மட்டுமே சிறிது நீர் தெளித்து, ரொம்ப கொரகொரப்பாகவோ,  அல்லது மிகவும் நைசாகவோ இல்லாமல் ரவை போல அரைத்த பின், சிறிது மல்லி, புதினா சேர்த்து சுற்றி எடுத்து மெலிதாக நறுக்கிய வெங்காயம் கொஞ்சமாகப் போட்டுப் பிசைந்து, காய்ந்த எண்ணெயில்  வடைகளாக,  மெலிதாக இல்லாமல் சற்று மொத்தமாகத் தட்டிப்  போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். முறுகலாகக் கூடாது. ஏனெனில் முறுகிய வடைகள் குழம்பை வாங்குவது கடினம். அதே சமயம் வேக்காடு போதுமான அளவு இல்லையெனில் வடைகள் குழம்பில் சிதைந்து விடும்.

                        வடைகளை மூன்று நான்காக விண்டு வைத்துக் கொள்ளுங்கள்.

                         இப்போ குழம்புக்காக ,வாணலியில்  எண்ணெய் காயவைத்து, கடுகு  ,உளுந்தம் பருப்பு ( அல்லது பட்டை கிராம்பு)  , கறிவேப்பிலை தாளித்து,  பொடியாக நறுக்கிய. வெங்காயம், தக்காளி இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, நீர் விட்டு உப்பு,  மஞ்சள் பொடி  1/4 டீஸ்பூன் ,மிளகாய்ப்பொடி , மல்லிப்பொடி, சீரகப்பொடி தலா 1/2 டீஸ்பூன் சேர்த்துக்  கொதிக்க விடவும். விரும்பினால்  சிறிது  புளி நீர் விடலாம்.

                   ( வடைக்கு அரைத்த மாவையே சிறிது வைத்திருந்து, நீர் விட்டுக் கரைத்து விட்டாலும் குழம்பு திக்காக வரும். ஏனென்றால் தேங்காய் சேர்ப்பதில்லை.தேங்காய் வடைகறியின் பக்குவத்தையும்,  சுவையையும் குறைக்கிறது என்பது என் கருத்து மற்றும் அனுபவம்  .)

                  குழம்பு பச்சை வாசனை மறைந்து நல்ல மணம் வரும் போது, தேவைப்பட்டால் நீர் சேர்த்து குழம்பை லூசாக்கிக் கொதித்ததும், வடைகளைச் சேர்க்கவும்.  வடை சேர்த்து சில நிமிடங்கள் கொதித்த பின்னர் குழம்பும், வடைகளும் சுவையையும், மணத்தையும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் போதுதான் வடைகறி முழுமையான பக்குவத்துக்கு வரும். இறக்கும் போது சற்று தளர்ச்சியாக இறக்கினால் ,

வடைகள் குழம்பை உறிஞ்சி,  ரொம்ப இறுகிவிடாமல் சாப்பிட சுவையாக. இருக்கும்.

               




தஹி கடி

                                தஹி கடி                                                                *************       

      தேவை :

                கடலை மாவு ---- 1 டேபிள்ஸ்பூன்,       பூண்டு பற்கள் ---- 4,

                பெரிய வெங்காயம் -- 1,   தக்காளி -- 1,மல்லித்தழை - சிறிது,

                தயிர் -    1 கப்,     மிளகாய்த்தூள் , மல்லித்தூள், சீரகத்தூள் --- 

                                                                                                                தலா ----  1/2 டீஸ்பூன்,


          எண்ணெய், உப்பு -----  தேவைக்கு :

    செய் முறை :

                      கடலை  மாவை  வெறும்  வாணலியில் வறுத்தெடுக்கவும். 

                        வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம்  ,தக்காளி, பூண்டு மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.  பச்சைமிளகாயை கீறிப் போட்டு எல்லாம் வதங்கி தொக்கு போல ஆனதும் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கடலை  மாவுடன் நீர் சேர்த்து  சற்று நீர்க்கக் கரைத்து ஊற்றி நன்கு கொதித்து, பச்சை வாசனை  நீங்கி  ,குழம்பு நல்ல வாசனையோடு  திரண்டதும், தயிர்  சேர்த்து கிளறி, பொங்கியதும் இறக்கவும்.

                         விரும்பினால் காய்கள் சேர்த்தும் செய்யலாம். போண்டா பொரித்து  கொதித்து இறக்கியதும் போடலாம் . இது  வட இந்தியாவின் பக்குவத்தில் மோர்க்குழம்பு. சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பொங்கல், வடை போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.





 

திங்கள், 7 செப்டம்பர், 2020

கவுனி தித்திப்பு பொங்கல்


                   கவுனி தித்திப்பு பொங்கல் 

                          *********************************************************

தேவை :
--------------
        கவுனி அரிசி  ----  1 கப்,
        பால்   ----                  2 கப் ,
       சர்க்கரை ----            1 1/2 கப், 
       நெய்  ---------               100 கிராம்,
        ஏலக்காய்    -------     6,
         திராட்சை,  முந்திரி ---- தலா 20 கிராம்.

செய்முறை :
-----------------
          கவுனி அரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் போட்டு நாலு கப் நீர் சேர்த்து மூடி வைத்து இரண்டு மணி நேரம் ஊறவிட்டபின், இரண்டு கப் பால் சேர்த்து அடுப்பில் வைத்து மூடி வெயிட் போடவும். ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பை குறைத்து வைத்து பதினைந்து நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். 

           பிரஷர் தணிந்ததும் குக்கரைத் திறந்து, குழைந்திருக்கும் கலவையை கரண்டியால் மசித்து விட்டு, அடுப்பில் வைத்து ( குறைந்த தணலில்) ,சர்க்கரை சேர்த்துக் கிளறி, நெய் விட்டு ஏலப்பொடி போட்டு நன்கு கிளறி, நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கி,பரிமாறவும். செம டேஸ்ட்! 

                  


ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

மாப்பிள்ளை சம்பா கிச்சடி

               

                     மாப்பிள்ளை சம்பா கிச்சடி

                                   ***************************************************************************

தேவை :

---------------------

மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி ----  1 கப்  ,

பீட்ரூட், கேரட், பீன்ஸ், குடமிளகாய், பச்சைப்பட்டாணி போன்ற காய்கள் ---- தலா சிறிது (எல்லாமாக 200 கிராம் அளவில்)                                           தக்காளி -- 1 ,       பெரிய வெங்காயம் -சின்னதாக 1,    பச்சை மிளகாய் --- 3 ,மல்லி, புதினா - -தலா சிறிது,

எண்ணெய், உப்பு,  கடுகு, உளுந்தம் பருப்பு -  தேவைக்கு,

நெய் - 1 டேபிள்ஸ்பூன்.                                                                   -----------------------------------------------

செய்முறை                                                                                          ---------------------                                                                                       மாப்பிளை சம்பா அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து, 3 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் போட்டு 1 மணிநேரம் ஊறியபின் சிறிது உப்பு போட்டுக் கிளறி அடுப்பில் வைத்து மூடி வெயிட் போட்டு ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து, மூன்று நிமிடங்கள் பொலிய விட்டு அடுப்பை அணைக்கவும்.                                              குக்கரில்  அரிசி வெந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பர்னரில்  வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு,உளுந்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகள், மெலிதாக நறுக்கிய வெங்காயம், விரும்பினால் 1 டீஸ்பூன் இஞ்சித் துருவல் சேர்த்து  வதக்கி ,புதினா , மல்லி சேர்த்து  நன்கு பொன்னிறமாக வதங்கியதும் துண்டுகளாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்துப் புரட்டி நீரும் உப்பும் சேர்த்து வெந்து நீர் வற்றியதும்,  குக்கரில் வெந்திருக்கும் அரிசிக் கலவையைச் சேர்த்து  நெய்விட்டு நன்கு  கிளறி பொலபொலப்பாக இறக்கவும்.

மிகச் சிறப்பான, சத்தும், சுவையும்  நிறைய காலை மற்றும் இரவு நேர உணவு. அனைவருக்கும் ஏற்ற நார்ச்சத்து, புரதம், தாதுப் பொருட்கள்  நிரம்பியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. 


 

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

கறிவடாம் குழம்பு

                        கறிவடாம் குழம்பு
                        *******************
தேவை :
-------------
              சின்ன வெங்காயம் ----- 1 கைப்பிடி,
                பூண்டு பற்கள்-----           6,
                  தக்காளி    -------               1,
                   புளி ----------               சின்ன எலுமிச்சையளவு ,
                     கறி வடாம் ( சின்ன சைஸ்) ----- 2,
                      மிளகாய்த்தூள் -----------     1/2 டீஸ்பூன்,
                        மல்லித்தூள் -------              1 டீஸ்பூன்,
                          சீரகத் தூள் --------               1/2 டீஸ்பூன்,
                           மஞ்சள் தூள் -------              1/2 டீஸ்பூன்                                        கறிவேப்பிலை ----               1 ஆர்க்கு,
                             மல்லித்தழை  --------            சிறிது,
                             உப்பு, எண்ணெய் ------ தேவைக்கு.
செய்முறை :
--------------------
             வாணலியில் எண்ணெய் காயவைத்து, கறிவடாம்களை உதிர்த்து விட்டு நன்கு பொரித்து எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும், உரித்த வெங்காயம், பூண்டு ,தக்காளித் துண்டுகள் சேர்த்து, பொன்னிறமாக வதங்கியதும், புளி கரைத்த நீர் விட்டு, மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மல்லித்தழை சேர்த்து நன்கு கொதித்து, குழம்பு நல்ல மணம், நிறத்தோடு எண்ணெய் பிரியும் தருணத்தில், பொரித்து வைத்திருக்கும் கருவடாம்  சேர்த்துக்  கிளறி இறக்கவும்.  
                  சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.