இனிப்பு வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிப்பு வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 டிசம்பர், 2013

இனிப்பு கேரட் சப்பாத்தி

இனிப்பு கேரட் சப்பாத்தி



தேவையானவை:
பெரிய கேரட்-2
சர்க்கரை-100 கிராம்
பால்-1/4 லி
நெய்-1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-5
முந்திரி-25 கிராம்
திராட்சை-25 கிராம்

செய்முறை:
                  கேரட்டை தோல் நீக்கி சீவி தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் இரண்டு சுற்று ஓடவிட்டு, பிறகு கால் டம்ளர் பால் விட்டு வேகவிடவும். மீதி பாலை சுண்ட காய்ச்சி இந்த கலவையில் ஊற்றி அடி பிடிக்காமல் கிளறவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாகு முதிர்ந்து வரும் போது இந்த கலவையை கொட்டி ஏலப்பொடி , நெய் சேர்த்து கிளறவும்.பாத்திரத்தில் சுருண்டு ஒட்டாமல் வரும் போது முந்திரி, திராட்சை வறுத்து போட்டு கிளறி இறக்கி விடவும்.இதை சப்பாத்தியின் நடுவில் வைத்து சுருட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

சனி, 23 நவம்பர், 2013

டேட்ஸ் ஆல்மண்ட் அல்வா

டேட்ஸ் ஆல்மண்ட் அல்வா





தேவையானவை:
பால்- 4 கப்
ஊற வைத்து தோலுரித்து அரைத்த பாதாம் விழுது-1 கப்
சர்க்கரை – 2 கப்
பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம்-3/4 கப்
மைதா-50 கிராம்
 நெய்-250 கிராம்
முந்திரிபருப்பு-25 கிராம்
லெமன் யெல்லோ கலர்ப்பொடி -1 சிட்டிகை.


செய்முறை:

           மைதாவை நெய்யில் தளர்ச்சியாக வறுக்கவும்.பேரீச்சம் பழத்தை  பாலில் நன்கு வேக வைத்து மசிக்கவும்.முதலில் 1 கப் பாலுடன் பாதாம் விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். திரண்டு வந்ததும் சிறிது சிறிதாக எல்லா பாலையும் சேர்த்து கிளறிக்கொண்டிருக்கவும். இன்னொரு பர்னரில் சர்க்கரையுடன் 1 ½ கப் நீர் சேர்த்து பாகு வைக்கவும்.பால்,பாதாம் கலவையுடன் பேரிச்சை , மைதா சேர்த்து கிளறவும்.லெமன் யெல்லோ ஒரு சிட்டிகை சேர்த்து கிளறவும்.எல்லா  நெய்யையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். முதிர்ந்த பாகில் கொட்டி கிளறவும்.தேவைப்பட்டால் ஏலப்பொடி சேர்க்கவும். முந்திரி துண்டுகள் நெய்யில் சேர்த்து வறுத்து கிளறி , பாத்திரத்தில் ஒட்டாமல்  நெய் பிரியும் வேளையில் அடுப்பை அணைத்துவிட்டு  அந்த சூட்டிலேயே சிறிது நேரம் கிளறி , இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி பரப்பவும்.இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று சுவையை தூண்டும் அல்வா இது..!

சனி, 9 நவம்பர், 2013

பாதாம் ரவா லட்டு

பாதாம் ரவா லட்டு



செய்முறை 
                         பாதாம்பருப்பையும்  ரவையையும்  வெறும் வாணலியில்  தனித்தனியாக  வறுத்து  மிக்சியில்  நைசாகப்  பொடிக்கவும்.சர்க்கரையையும்  தனியாகப்  பொடித்து  எலப் பொடி  சேர்த்துக் கலக்கவும்.முந்திரிப்பருப்பைச் சிறு  துண்டுகளாக்கி  நெய்யில்  வறுத்துச்  சேர்க்கவும்.சர்க்கரையும்  ரவைமாவும்  ஒன்றாகச்  சேரும்படி  நன்றாகக்  கலக்கவும்.வெண்ணெயைக்  காய்ச்சி  நெய்யானதும்  சூடாக  இந்த  மாவில்  சேர்த்துக்  கிளறி  அழுத்தி  மூடி வைத்து  உருண்டைகளாக  
பிடிக்கவும்.

பாதாம் பர்பி

பாதாம் பர்பி 

செய்முறை 

            பாதாம்பருப்பை  நெய்விட்டு  வறுத்து  நைசாகப் பொடிக்கவும்.மைதாமாவில்  நெய்விட்டு  வறுத்து இட்லிமாவுபோல் 
 தளர்ச்சியாக  வாசம்  வரும்வரை வறுத்து  இறக்கவும்.சிறிது  ஆறியதும் 
பாதாம்பொடியைச் சேர்த்துக்  கலக்கவும்.முழுகும் வரைத்  தண்ணீர்  விட்டு  சர்க்கரையைப்  பாகு வைக்கவும்.முற்றலாகக்  கம்பிப்பதம்  வந்ததும்  இறக்கி  அடுப்பை  அணைக்கவும்.பாகுடன்  மைதாகலவையைச் சேர்த்து  வேகமாகக்  கிளறவும்.விரும்பினால்  விரும்பினால் சிறிது  கலர்  சேர்க்கவும்.அடுப்பில்  வைக்க  வேண்டாம்.கிளறும்போது  திரண்டு  வந்ததும்  நெய்  தடவிய  ட்ரேயில்  கொட்டிப்  பரப்பித்  துண்டு  போடவும்.

பாதாம் கேசரி

பாதாம் கேசரி




செய்முறை 

              பாதாம்பருப்பை  நெய்விட்டு  வறுத்து  நைசாகப்பொடிக்கவும்.ரவையை  வெறும்  வாணலியில்  வறுத்து  வைக்கவும்     3/2கப்  தண்ணீர்  கொதிக்க வைத்து ரவையைத் தூவி அடுப்பைக் குறைத்து வைத்துக் கிளறவும்.சிறிது கலர்சேர்க்கவும்.ரவை வேகும் போது பாதாம் பொடியைச் சேர்க்கவும்.மசித்துக்  கிளறவும்.சிறிது  சிறிதாக  நெய்  சேர்க்கவும்.கேசரி  பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது எலப்பொடி நெய்யில்  வறுத்த  திராட்சை  முந்திரி  போட்டுக்  கிளறி இறக்கவும்



வியாழன், 17 அக்டோபர், 2013

கேரட் மில்க் பர்பி

                              கேரட் மில்க் பர்பி





தேவையானவை:

கேரட்- 200 கிராம்
மைதா-200 கிராம்
சர்க்கரை-600 கிராம்
பால்பவுடர்-150 கிராம்
நெய்-300 கிராம்

செய்முறை:

கேரட்டை தோல் சீவி துருவி சிறிது நீர் சேர்த்து மூன்று நிமிடம் வேகவைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.மைதாவை மிதமான தணலில்  நெய்யில் குழம்பு போல் வாசனை வரும் வரை க்ரீம் கலராக வறுத்து எடுக்கவும்.சிறிது ஆறியதும் பால் பவுடரை தூவி சேர்த்து கிளறி விடவும்.
சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டு பாகு வைக்கவும்.சர்க்கரை கரைந்து கொதிக்கும் போது கேரட் விழுதை சேர்க்கவும்.இரண்டும் சேர்ந்து பாகு கலவையாக உருட்டுப் பதமாக வரும் போது இறக்கி அத்துடன் மைதா, பால் பவுடர் கலவையை சேர்த்து கைவிடாமல்  வேகமாக  கிளறவும்.        ( பாகை இறக்கிய பின் மீண்டும் அடுப்பில் வைக்க கூடாது) கிண்டி கொண்டிருக்கும் போது  நுரைத்து திரளும் கலவையை  நெய் தடவிய ட்ரேயில் கொட்டி ஆறியதும் துண்டு போடவும்.

பாதாம் போளி

பாதாம் போளி


தேவையானவை 

பாதாம்பருப்பு --100கிராம் ,மைதா -250கிராம் ,வெல்லம் -100கிராம் ,தேங்காய் பூ ,-2டேபிள்ஸ் பூன் ,ஏலக்காய் -5,நெய் ,நல்லெண்ணை ,உப்பு ,மஞ்சள்பொடி -தேவைக்கேற்ப .

செய்முறை
பாதாம்பருப்பை வெறும் வாணலி யில்  வறுத்து நைசாகப்  பொடித்து சிறிது நெய்  சேர்த்துப் பிசிறி வைக்கவும்.மைதாமாவை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நீர் விட்டு   கலந்து நல்லெண்ணை சேர்த்து  சப்பாத்தி மாவு போல் பிசைந்து  இன்னும்  கொஞ்சம் நல்லெண்ணை மேலே ஊற்றி இரண்டு  மணி நேரம்  ஊற வைக்கவும் .
வெல்லத்தை  தேங்காய் பூவுடன்  பாகு வைத்து  பிசுக்குப் பதம்  வரும்போது பாதாம் பொடி யையும் ,ஏலப்பொடி யையும்  சேர்த்துக்  கிளறி கெட்டியாக  திரளும்போது  இறக்கவும் .மைதாவை  வாழைஇலையில்  அப்பளமாகத்  தட்டி  நடுவில்  பாதாம்  பூர்ணம்  வைத்து  மூடி  வட்டமாகத்  தட்டிதோசைக்கல்லில்  போட்டு  சுற்றிலும்  எண்ணெய்விட்டு  திருப்பிப்  போட்டு  வேகவைத்து  எடுக்கவும் .

கவுணி அரிசிப் பிடிக்கொழுக்கட்டை

கவுணி  அரிசிப்  பிடிக்கொழுக்கட்டை




தேவையானவை:

கவுணி {கருப்பு }அரிசி -1கப் ,  -1,வெல்லம் (பொடித்தது )-1/2 கப்,காராமணி பயிறு -1/4கப் ,ஏலக்காய் -5,தேங்காய் பூ-2 டேபிள்  ஸ்பூன்.
செய்முறை :
                     கவுணி (கருப்பு ) அரிசியை நீரில் 10நிமிடம்  ஊறவைத்து  நன்கு நீர் வடித்து வைக்கவும் .ஒரு மணி நேரத்திற்கு பிறகு நமத்து ,உலர்த்த நிலையில் உள்ள  அரிசியை நைசான ரவையாக பொடிக்கவும் .காராமணி  பயிறை லேசாக வறுத்து கொதிக்கும்  நீரில் போட்டு  குழையாமல் மலரவேகவைத்து நீர் வடித்து வைக்கவும்.

கொதிநீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீரை தேங்காய் பூவுடன்  சேர்த்து பாகு வைக்கவும்பாகு கெட்டியாகும் போது  கவுணி கருப்பு அரிசி ரவை ,காராமணி பயிறு,ஏலபொடி சேர்த்து கிளறிப் பாத்திரத்தில் ஒட்டாத நிலை வந்ததும் இறக்கி ஆறியபின் கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

இந்த கொழுக்கட்டை   சுவையானது .சத்து நிரம்பியது .

பயத்தம் பயறு சுண்டல்

பயத்தம் பயறு சுண்டல்



தேவையானவை:
 பயத்தம் பயறு -1 கப்
தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்
பெருங்காய பவுடர்-1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு- தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை-சிறிதளவு
மிளகாய் வற்றல்-4

செய்முறை:
பயத்தம் பயறை ஒரு மணி நேரம் ஊறப்போடவும். அந்த தண்ணீரை நீக்கிவிட்டு சுத்தமான தண்ணீரில் உப்பு போட்டு குழையாமல் வேக விட்டு நீர் வடிக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து அத்துடன் வெந்த பயறை சேர்த்து , பெருங்காய பவுடர் தூவி , தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்கவும
                                              - - - - -
-  லலிதா சண்முகம், திருச்சி

உளுந்தங்கொழுக்கட்டை

உளுந்தங்கொழுக்கட்டை





தேவையானவை:
 மாவுப்பச்சரிசி -1 கப்
வெள்ளை உளுந்தம் பருப்பு -1/2 கப்
பச்சை மிளகாய்-2
பெருங்காய பவுடர்-1/4 டீஸ்பூன்
மல்லித்தழை சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு- தலா ¼ டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-2

செய்முறை:
அரிசியை கொழுக்கட்டை மாவாக்கவும்.உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து முற்றுமாக தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், உப்பு, பெருங்காய பவுடர், சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பொடிக்கவும்.சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து விடவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு , உளுத்தம்பருப்புடன், மிளகாய் வற்றலின் விதைகளை மட்டும் உதிர்த்து போட்டு தாளித்து  தேங்காய் பூ சேர்த்து வறுத்த உளுத்தம் பருப்பு மாவில் கலக்கவும்.மல்லித்தழை பொடியாக நறுக்கி போடவும்.
மாவை எண்ணெய் தடவிய வாழை இலையில் தட்டி உளுத்தம் பருப்பு கலவையை நடுவில் வைத்து மூடி ஓரங்களை இணைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.