வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வரகு பனங்கற்கண்டு பொங்கல்


தேவையானவை:
வரகு அரிசி-1 கப்
பாசிப்பருப்பு-1/2 கப்
திக்கான பால்-1 கப்
பனங்கற்கண்டு-1 கப்
நெய்- 100 கிராம்
ஏலக்காய்-6
முந்திரிப்பருப்பு, திராட்சை- தலா 25 கிராம்

செய்முறை

களைந்து நீர் வடித்த வரகு அரிசியுடன், வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்துப் போட்டு மூன்று கப் நீர், பால் சேர்த்து குக்கரில் வைத்து நாலு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ப்ரஷர் தணிந்ததும் குக்கரை திறந்து பனங்கற்கண்டைச் சேர்த்து மசித்து மீண்டும் அடுப்பில் வைக்கவும். கற்கண்டு கரைந்து தளர்ச்சியான கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரளும் வரைக் கிளறவும். அடுப்பு ஸிம்மில் இருக்க வேண்டும். நெய், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி முந்திரி, திராட்சையையும் நெய்யில் வறுத்து சேர்த்து கிளறினால் சுவையான வரகு பனங்கற்கண்டு பொங்கல் ரெடி..!

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சிகப்பு அவல் சர்க்கரை பொங்கல்

தேவையானவை:
சிகப்பு அவல் - 1 கப்
முற்றிய தேங்காய் - 1
சர்க்கரை - 1 ½ கப்,
ஏலக்காய் - 5
முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்
நெய் - 50 கிராம்

செய்முறை: 

சிகப்பு அவலுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பிசிறி மூடி வைக்கவும். (சிகப்பு அவல் கெட்டி அவலாக இருக்க வேண்டும்) தேங்காயை அரைத்து இரண்டு கப் பால் எடுக்கவும்.

அவல் அரைமணி நேரம் ஊறிய பின் அத்துடன் தேங்காய்ப்பாலை சேர்த்து குழைய வெந்ததும், சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்து நன்றாக அவலுடன் சேர்த்து முதிர்ந்ததும் நெய்,  நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலப்பொடியை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சத்தான சிகப்பு அவல் சர்க்கரை பொங்கல் ரெடி..!

பருப்பு பொங்கல்

 
தேவையானவை:
பச்சரிசி-1 கப்
துவரம்பருப்பு -1/2 கப்
தக்காளி -2 கப்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-4
இஞ்சி- சிறியதுண்டு
கறிவேப்பிலை, மல்லித்தழை- தலா சிறிதளவு
பூண்டு-6 பல்
முந்திரிப்பருப்பு-25 கிராம்
 நெய்-50 கிராம்
மஞ்சள் பொடி, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
 
செய்முறை: 
பச்சரிசியையும் துவரம்பருப்பையும் ஒன்றாக களைந்து குக்கரில் போட்டு நாலு கப் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். இன்னொரு பர்னரில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி , பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி குக்கரில் போடவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் போட்டு கிளறி  குக்கரை மூடி வெயிட் போடவும். நாலு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ப்ரஷர் தணிந்து குக்கரை திறந்து மசித்து கிளறி நெய், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும். மல்லித்தழை தூவை பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதாவது ஒரு கார குழம்பு தயாரிக்கலாம்.

கோதுமை தித்திப்பு பொங்கல்

 தேவையானவை:
சம்பா கோதுமைக்குருணை - 1 கப்
பாசிப்பருப்பு - ½ கப்
பால் -1 கப்
உருண்டை வெல்லம் - 400 கிராம்
நெய் -100 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்

செய்முறை:  

கோதுமைக் குருணையையும், பாசிப்பருப்பையும் சிறிதளவு நெய் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து மூன்று கப் தண்ணீர், பால் சேர்த்து குக்கரில் போட்டு , நாலு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

வெல்லத்தை கொதி நீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் பாகு வைக்கவும். பாகு முதிர்ந்ததும் இறக்கி பிரஷர் தணிந்த குக்கரை திறந்து கலவையை மசித்து அத்துடன் வெல்லப்பாகை சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து நெய், ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறி முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப்போட்டு கிளறி இறக்கினால் தித்திப்பு பொங்கல் ரெடி..!

சாமை வெஜிடேபிள் பொங்கல்

 
தேவையானவை: 

சாமை - 1½ கப்

கேரட், உருளைகிழங்கு, நூல்கோல், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி போன்ற விரும்பிய காய்கறிகள் தலா - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
நெய் - 50 கிராம்
எலுமிச்சை பழம் -1
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

சாமையை நாலு கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் குழைய வேகவிடவும். பிரஷரில் வைக்க வேண்டுமென்று அவசியமில்லை. காய்கள், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி நெய் சேர்த்து வதக்கவும். (விரும்பினால் பெரிய வெங்காயம் கொஞ்சம் சேர்க்கலாம்) வதங்கிய பின் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொஞ்சமாக உப்பு போட்டு அடிக்கடி கிளறிவெந்ததும், நீர் வற்றியதும் இவற்றை சாமை பொங்கலுடன் நெய் சேர்த்து  கிளறவும். நன்கு ஒன்று சேர்ந்ததும் எலுமிச்சை சாறு பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

வரகு வெண் பொங்கல்


தேவையானவை:

வரகு -1 கப்,
பாசிப்ப்ருப்பு-1/2 கப்
மிளகு, சீரகம்- தலா ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு-25 கிராம்
இஞ்சி- சிறு துண்டு
நெய்- 25 கிராம்

செய்முறை: 

வரகு அரிசி, பாசிப்பருப்பை ஒன்றாக நான்கு கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் போட்டு நாலு விசில் வரும் வரை வெந்ததும் அடுப்பை அணைக்கவும். ப்ரஷர் தணிந்ததும் திறந்து மசித்து மீண்டும் அடுப்பில் வைத்து நெய், நெய்யில் வறுத்த மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சித்துண்டுகளையும் போட்டு கிளறி குழைவாக இறக்கவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி கிளறி விடவும்.

இந்த பொங்கலுக்கு சாம்பார், தேங்காய் சட்னி, மல்லி சட்னி ஆகியவை சுவையாக இருக்கும்.

கிச்சன் கார்னர்- இனிதான ஆரம்பம்-பால்கோவா பொங்கல்

 நான் லலிதா சண்முகம் , என் சமையல் குறிப்புகள் பல மங்கையர் மலர், அவள்விகடன், தினமலர், தங்க மங்கை இன்னும் பல இதழ்களில் வெளியாகியுள்ளது. இனிப்பு வகைகளோடு என் பக்கத்தை ஆரம்பித்து பல சுவையான ரெசிப்பிகளை வழங்க போகின்றேன். சுவைக்க வாங்க..!

பால்கோவா பொங்கல்
 

தேவையானவை:
பச்சரிசி- 1 கப்
டைமன் கல்கண்டு-1 கப்
ஆவின் பால்- 1 லிட்டர்
நெய்- 100 கிராம்
ஏலக்காய்-6
முந்திரி, திராட்சை- தலா 25 கிராம்.

செய்முறை: 

பச்சரிசையை களைந்து நீர் வடித்து மூன்று கப் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் போட்டு ப்ரஷர் வந்ததும் ஸிம்மில் அடுப்பை வைத்து மூன்று நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைக்கவும்.

ஆவின் பாலோடு, கல்கண்டை சேர்த்து கொதிக்கவிட்டு கோவாவாக திரளும் வரை கிளறி , நெய் ஏலப்பொடி சேர்க்கவும். நன்கு கிளறி திராட்சை, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து போட்டு கிளறி விடவும்.

(பால் கோவாவை வெந்த சாதத்துடன் சேர்த்து கிளறும் போது அடுப்பில் வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை)