வியாழன், 10 செப்டம்பர், 2020

வடைகறி

                               வடைகறி                                                              **********                           

 தேவை :            

------------

            கடலைப்பருப்பு ----- 1 கப்,       சோம்பு  ---- 1டீஸ்பூன்,  பச்சைமிளகாய் ---- 4 ,

            இஞ்சி - சின்ன துண்டு,    பெரிய வெங்காயம் ---- 1 ,    தக்காளி --- 1, 

             புதினா, மல்லி  --- தலா சிறிது.  எண்ணெய், உப்பு --- தேவைக்கு.         

 செய்முறை : 

--------------------

                     கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிட்டு  நீர் வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி  , சோம்பு, உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் மட்டுமே சிறிது நீர் தெளித்து, ரொம்ப கொரகொரப்பாகவோ,  அல்லது மிகவும் நைசாகவோ இல்லாமல் ரவை போல அரைத்த பின், சிறிது மல்லி, புதினா சேர்த்து சுற்றி எடுத்து மெலிதாக நறுக்கிய வெங்காயம் கொஞ்சமாகப் போட்டுப் பிசைந்து, காய்ந்த எண்ணெயில்  வடைகளாக,  மெலிதாக இல்லாமல் சற்று மொத்தமாகத் தட்டிப்  போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். முறுகலாகக் கூடாது. ஏனெனில் முறுகிய வடைகள் குழம்பை வாங்குவது கடினம். அதே சமயம் வேக்காடு போதுமான அளவு இல்லையெனில் வடைகள் குழம்பில் சிதைந்து விடும்.

                        வடைகளை மூன்று நான்காக விண்டு வைத்துக் கொள்ளுங்கள்.

                         இப்போ குழம்புக்காக ,வாணலியில்  எண்ணெய் காயவைத்து, கடுகு  ,உளுந்தம் பருப்பு ( அல்லது பட்டை கிராம்பு)  , கறிவேப்பிலை தாளித்து,  பொடியாக நறுக்கிய. வெங்காயம், தக்காளி இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, நீர் விட்டு உப்பு,  மஞ்சள் பொடி  1/4 டீஸ்பூன் ,மிளகாய்ப்பொடி , மல்லிப்பொடி, சீரகப்பொடி தலா 1/2 டீஸ்பூன் சேர்த்துக்  கொதிக்க விடவும். விரும்பினால்  சிறிது  புளி நீர் விடலாம்.

                   ( வடைக்கு அரைத்த மாவையே சிறிது வைத்திருந்து, நீர் விட்டுக் கரைத்து விட்டாலும் குழம்பு திக்காக வரும். ஏனென்றால் தேங்காய் சேர்ப்பதில்லை.தேங்காய் வடைகறியின் பக்குவத்தையும்,  சுவையையும் குறைக்கிறது என்பது என் கருத்து மற்றும் அனுபவம்  .)

                  குழம்பு பச்சை வாசனை மறைந்து நல்ல மணம் வரும் போது, தேவைப்பட்டால் நீர் சேர்த்து குழம்பை லூசாக்கிக் கொதித்ததும், வடைகளைச் சேர்க்கவும்.  வடை சேர்த்து சில நிமிடங்கள் கொதித்த பின்னர் குழம்பும், வடைகளும் சுவையையும், மணத்தையும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் போதுதான் வடைகறி முழுமையான பக்குவத்துக்கு வரும். இறக்கும் போது சற்று தளர்ச்சியாக இறக்கினால் ,

வடைகள் குழம்பை உறிஞ்சி,  ரொம்ப இறுகிவிடாமல் சாப்பிட சுவையாக. இருக்கும்.

               




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக